For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். அமைச்சர் நூலை வெளியிடுவதா? அத்வானி உதவியாளர் குல்கர்னி மீது கருப்பு மை வீசி சிவசேனா தாக்குதல்

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கசூரி நூலை மும்பையில் வெளியிட ஏற்பாடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் உதவியாளராக இருந்தவரும் சமூக ஆர்வலருமான சுதீந்திரா குல்கர்னி மீது மும்பையில் சிவசேனா தொண்டர்கள் கருப்பு மை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை ஐ.ஐ.டி.யில் படிப்பை முடித்த சுதீந்திரா குல்கர்னி, 1996ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் எல்.கே.அத்வானி ஆகியோரது உரைகளை தயாரிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் 2009ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து அவர் வெளியேறினார்.

Sudheendra Kulkarni's face smeared with black ink over Pak minister's book

2008 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் 2011ஆம் ஆண்டு குல்கர்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பா.ஜ.க.வில் அத்வானி ஓரம்கட்டப்பட்ட நிலையில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார் குல்கர்னி.

தற்போது வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆய்வுப் பணிகளில் குல்கர்னி ஈடுபட்டு வருகிறார். மும்பையில் பாகிஸ்தானின் அமைச்சராக இருந்த குர்ஷித் முகமது கசூரியின் நூல் ஒன்றை வெளியிடுவதற்கான விழாவை இன்று குல்கர்னி ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நேற்று இரவு அவரது இல்லத்தில் குல்கர்னி சந்தித்து பேசினார். சிவசேனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று குல்கர்னி வீட்டுக்கு வெளியே அவரை சூழ்ந்து கொண்ட சிவசேனா தொண்டர்கள் கசூரி நூல்வெளியீட்டு விழாவை நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தபடி உடல் முழுவதும் கருப்பு மையை கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இச்சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் திட்டமிட்டபடி கசூரி நூல் வெளியீட்டு விழாவை நடத்தியே தீருவேன் என்று குல்கர்னி உறுதியாக அறிவித்திருக்கிறார். இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் கசூரி மும்பையில் தங்கியுள்ளதால் அவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் சிவசேனா தொண்டர்களின் எதிர்ப்பால் கடந்த வாரம் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருப்பு மையுடன் நூல் வெளியீடு

இதனைத் தொடர்ந்து தம் மீது வீசப்பட்ட கருப்பு மையுடன் செய்தியாளர்களை குல்கர்னி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பாகிஸ்தான் அமைச்சர் கசூரியும் உடனிருந்தார்.

இச்செய்தியாளர் சந்திப்பிலேயே கசூரியின் நூலை அறிமுகமும் செய்தார் குல்கர்னி. அப்போது, என் மீது வீசப்பட்ட இந்த கருப்பு மையை நான் அழிக்கப் போவதில்லை இருந்துவிட்டுப் போகட்டும் என்றார்.

6 பேர் மீது வழக்கு

இதனிடையே குல்கர்னி மீது கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக 6 சிவசேனா தொண்டர்கள் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அத்வானி கடும் கண்டனம்

மேலும் சுதீந்தரா குல்கர்னி மீது கருப்பு மை வீசி தாக்குதல் நடத்திய சிவசேனாவுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் ஈடுபட்டது யாராக இருந்தாலும் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அத்வானி கூறியுள்ளார்.

English summary
Well-known columnist and socio-political-activist Sudheendra Kulkarni's face was smeared by black ink by some Shiv Sena workers on Monday, Oct 12 morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X