• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக அலுவலகம் மீது குண்டு வீச்சு: போலீசை குற்றம் சாட்டி, என்ஐஏ விசாரணை கோரும் அண்ணாமலை

By BBC News தமிழ்
|

Click here to see the BBC interactive

பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டுமென அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கோரியிருக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

சென்னை தியாகராய நகரில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையகமான கமலாலயம் அமைந்திருக்கிறது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் அந்தத் தெருவுக்குள் வந்த ஒருவர், பெட்ரோல் குண்டை வீசிச் சென்றார்.

அந்த அலுவலகத்தின் முன் கதவு சாத்தப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடந்தது.

இதற்குப் பிறகு அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்ததில், இருசக்கர வாகனத்தின் எண் கண்டுபிடிக்கப்பட்டு, நந்தனத்தைச் சேர்ந்த வினோத் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மாநிலம் முழுவதும் பா.ஜ.க. அலுவலகங்கள், தேர்தல் பணிமனைகள் மீது தாக்குதல் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முதலமைச்சர் கவனம் கொடுத்து இதை நிறுத்தவில்லையென்றால் என்ன ஆகுமென்று எனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

"யார் சொல்லி இதைச் செய்தார்கள் என்று தெரியவேண்டும். இதையெல்லாம் தனிமனிதர் செய்யவாய்ப்பில்லை. இது மிகப் பெரிய சதி. ஆகவேதான் இதனை என்.ஐ.ஏ. விசாரிக்கவேண்டும் எனக் கோருகிறோம்.

யார் இதைச் செய்ததாக கைதுசெய்யப்பட்டாரோ அவருக்கும் கல்விக்கும் பல்லாயிரக்கணக்கான மைல் இடைவெளி இருக்கிறது. இதைச் செய்தவருக்கு 'நீட்' என்ற வார்த்தை தெரியுமா என்பது தெரியவில்லை. அதன் விரிவாக்கம், அர்த்தம் தெரியுமா என்பது தெரியவில்லை.

டாஸ்மாக் வேண்டாமென்று குண்டு வீசியதாக சொல்லப்பட்ட, நபர் இப்போது குடித்துவிட்டுவந்து குண்டு வீசியதாகச் சொல்கிறார்கள்.

இதைச் செய்யச் சொன்னவர் இங்கே வந்திருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஆகவேதான் இதன் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க இந்த விவகாரத்தை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக என்னுடைய பாதுகாப்பைக் குறைத்தார்கள். 'ஒய்' பிரிவிலிருந்து 'எக்ஸ்' பிரிவுக்குக் கொண்டுபோனார்கள். அப்படித்தான் என்னைப் பழிவாங்க வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள். எதற்காக ஒரே ஒரு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு கொடுத்திருக்கிறீர்கள்? அதையும் எடுத்துவிடுங்கள். என்னுடைய தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது. தொலைபேசியை 'பக்' செய்கிறார்கள். உடன் இருக்கும் ஆட்களை வைத்து கண்காணிக்கிறார்கள். இந்த அலுவலகம் அமைந்திருக்கும் சந்தின் இரண்டு பக்கமும் இருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் பேசினால் நன்றாக இருக்காது. நாங்கள் கோழைகள் கிடையாது.

உளவுத் துறை மீது குற்றச்சாட்டு

நீங்கள் பாதுகாப்பைக் குறைத்ததற்காகப் பணிந்துபோகும் ஆள் கிடையாது. பாதுகாப்பைக் குறைத்தது ஏன் என அரசுதான் முடிவுசெய்ய வேண்டும். தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரை அதற்கான ஆதாரம் நிறைய இருக்கிறது. ட்விட்டரிலும் யு டியூபிலும் இருப்பவர்களைக் கொண்ட வாட்ஸப் க்ரூப் வைத்திருக்கிறார்கள். நான் ஏதாவது பேசினால், அண்ணாமலை இதைப் பேசினார் என அதில் போட்டுவிடுகிறார்கள். அதை அவர்கள் 'எக்ஸ்க்ளூசிவ் பிரேக்கிங்' என போடுகிறார்கள். இதுதான் தமிழ்நாடு உளவுத் துறையின் புதிய செயல்பாடாக இருக்கிறது.

தமிழ்நாடு காவல்துறையை உளவுத் துறைதான் ஆதிக்கம் செய்கிறது. ஆனால், உண்மையில் எப்படி இருக்கவேண்டுமென்றால், டிஜிபிதான் தமிழக காவல்துறையின் தலைவராக இருக்க வேண்டும். ஆனால், உளவுத் துறையின் ஏடிஜிபிதான் தமிழக காவல்துறையின் தலைவராக செயல்படுகிறார். உளவுத் துறை என்பது எப்போதும் அரசியல் சார்ந்ததாக இருக்கும். உளவுத் துறை காவல்துறையைக் கையில் எடுத்தால் காவல்துறையே அரசியல்சார்ந்ததாக மாறிவிடும்.

அரியலூர் மாணவி விவகாரத்தில் எல்லாம் சொதப்பியதற்குக் காரணமே உளவுத் துறையின் தலையீடுதான். தனிப்பட்ட உள்நோக்கம், மதரீதியான காரணம் போன்ற எல்லாம் இதில் இருக்கிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு இப்படிப் பேச வேண்டும், அப்படிப் பேச வேண்டுமென சொல்லப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டை எங்கே கொண்டுபோய் விடுமெனத் தெரியவில்லை. இதே நிலையில் சென்றால் போலீஸ் அரசியல்மயமாகிவிடும்.

உளவுத் துறைத் தலைவர் காவல்துறையைக் கையில் எடுத்து, எஸ்பிக்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் நினைத்ததைச் செய்யலாமென கருதினால், எதற்காக டிஜிபி என்ற பதவி தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்? இதற்கு முதலமைச்சர் பதில் சொல்லவேண்டும்.

கமலாலயம்
Getty Images
கமலாலயம்

இவர்களது எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் 'போன் டேப்பிங்' என்று குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கிருக்கும் உளவுத் துறை மிக அதி நவீனமான முறையில் போனை ஒட்டுக்கேட்பு செய்கிறது. ஒட்டுக்கேட்பு எல்லாம் உள்துறைச் செயலருக்குச் சொல்லித்தான் நடக்க வேண்டும். ஆனால், பாதி கண்காணிப்பு சட்டவிரோதமாகத்தான் நடக்கிறது. இவர்கள் இப்படி சட்டவிரோதமாக கண்காணித்துவிட்டு, பா.ஜ.கவைக் குற்றம்சாட்டுவது எவ்விதத்தில் நியாயம்?

காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. ஒரு ஜனநாயக நாட்டில் காவல்துறைக்கு இருக்க வேண்டிய அதிகாரம்தான் காவல்துறைக்கு இருக்க வேண்டும். உளவுத்துறை ஆதிக்கம் செலுத்தும்போதுதான் இதுபோன்ற அரசியல் ஸ்டேட்மென்ட்கள் வரும்.

சென்னை மாநகர ஆணையர் மீது மிகப் பெரிய மரியாதை இருக்கிறது. ஆனால், மிக மோசமான போக்கை நோக்கி தமிழ்நாடு செல்கிறது. எல்லா அரசியல் தலைவர்களையும் எதிரியாகக் கருதி, அவர்களைக் கண்காணிப்பதுதான் வேலை, முடக்குவதுதான் வேலை என்று ஆரம்பித்தால் நிலைமை மோசமாகிவிடும்.

ஒரு வாட்ஸப் க்ரூப்பில் என்னைப் பற்றி உளவுத் துறைத் தலைவர் கருத்துத் தெரிவிக்கிறார். ஒரு உளவுத் துறை தலைவர் எப்படி ஒரு தனி மனிதன் மீது வன்மத்தைக் கக்கியிருக்கிறார் என்பதை அந்த ஸ்க்ரீன் ஷாட்டை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். அவர் எப்படி நியாயமாக, நேர்மையாக நடந்துகொள்வார்?

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு விஷயம் நடந்த உடனேயே எதற்காக காவல்துறை இதுதான் நடந்தது என சொல்கிறார்கள்? முதல் தகவல் அறிக்கையே பதிவுசெய்யாத நிலையில் எப்படி அந்த முடிவுக்கு வருகிறார்கள்?

கைது செய்யப்பட்டவர் ஏதாவது காரணத்தைச் சொல்வார். ஆனால், அதையே காரணம் என காவல்துறை செய்திக் குறிப்பு வெளியிடுவதை ஏற்க முடியாது. முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யாத நிலையில் குற்றம் நடந்த இடத்தைச் சுத்தம் செய்திருக்கிறார்கள். அதற்கான அதிகாரத்தை யார் கொடுத்தது? எதற்காக இவ்வளவு அவசரம், முனைப்பு என்பது தெரிய வேண்டும்.

போன் ஒட்டுக்கேட்பு குறித்து நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சுயாதீனமான விசாரணை செய்ய வேண்டும். நான் எது பேசினாலும் வெளிவந்துவிடுகிறது" என அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை
BBC
பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Tamilnadu BJP Office petrol bomb attack need NIA enquiry, State President Annamalai demand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X