உலகம் முழுக்க! உயர் பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கிறாங்க.. சந்திரபாபு நாயுடு சொன்னதை நோட் பண்ணீங்களா
அமராவதி: தமிழ்நாட்டில் இருந்து பலரும் அமெரிக்கா செல்கிறார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்று மிகச்சிறப்பாக செயல்படுகிறார்கள். உயர் பொறுப்புகளிலும் முதல் அல்லது இரண்டாவது இடங்களிலும் தமிழர்களே அதிகம் உள்ளனர். கூகுள் தலைமை அதிகாரிகூட ஒரு தமிழர்தான். தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் கற்றவர்கள் உலகளவில் சிறந்து விளங்குகிறார்கள் என்று ஆந்திர பிரதேசம் முதல்வர் சந்திரபாபு நாய்டு கூறியுள்ளார்.
தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை இடம் பெற்று இருக்கிறது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இத்தகைய சூழலில், தமிழகம் புதிய கல்விக்கொள்கை ஏற்றால் மட்டுமே, சுமார் 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கபடும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழர்களை புகழ்ந்து பேசிய சந்திரபாபு
தமிழகத்தில் பின்பற்றப்படும் இருமொழிக்கொள்கையால் ஆங்கிலத்தை நன்றாக படித்து உயரிய பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற வாதம் கல்வியாளர்களால் வைக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், ஆந்திர முதல்வரும் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தமிழ்நாட்டுக்கும் புகழாரம் சூட்டி பேசியுள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு பேசியிருப்பதாவது:-
உலகளவில் தமிழர்கள் சிறந்து விளங்குகிறார்கள்
தமிழ்நாட்டில் இருந்து பலரும் அமெரிக்கா செல்கிறார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்று மிகச்சிறப்பாக செயல்படுகிறார்கள். உயர் பொறுப்புகளிலும் முதல் அல்லது இரண்டாவது இடங்களிலும் தமிழர்களே அதிகம் உள்ளனர். கூகுள் தலைமை அதிகாரிகூட ஒரு தமிழர்தான். தமிழ்நாடு என்றாலே முன்பு இந்திய அளவில் சேவைத்துறையில் அதிகம் இருந்தனர். தற்போது உலகம் முழுக்க சென்றுள்ளனர். அதற்கு அவர்களின் திறமையே காரணம்.
ஒருவருடன் தொடர்பு கொள்ள மட்டுமே மொழி தேவைப்படுகிறது. அறிவுசார்ந்த படிப்புகள் தாய்மொழியில் தான் கிடைக்கும். தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் கற்றவர்கள் உலகளவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். அறிவு என்பது வேறு.. மொழி என்பது வேறு.. நான் 10 மொழிகளை படிக்க ஊக்குவிக்க போகிறேன். பல்கலைக்கழகங்களில் சர்வதேச மொழிகளையும் ஊக்குவிக்க போகிறேன்.
தொகுதி மறுசீரமைப்பு
தெலுங்கு மொழியையும் நாங்கள் ஊக்குவிக்க வேண்டியுள்ளது. ஆங்கிலம் சர்வதேச மொழி என்பதால் அதை ஊக்குவிக்க வேண்டும். இந்தி படிப்பதும் சிறந்ததுதான்.. அப்போதுதான் மக்களுடடன் எளிதில் பழக முடியும்" என்று பேசினார். முன்னதாக தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பேசியிருந்த சந்திரபாபு நாயுடு, "தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் மத்திய அரசு வெளியிடவில்லை. அதனை எப்படி கணக்கிடுவது என்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
சரியான நேரத்தில் இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்யும். இதுவரை எந்த மசோதாவும் இல்லை. அனுமானங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை" என்றார். மக்கள் தொகை தொடர்பாக பேசிய சந்திரபாபு நாயுடு, "குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் நான், தற்போது என் நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறேன். அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மக்கள்தொகை அதிகமாக இருப்பது நல்லதுதான்" என்றார்.












Click it and Unblock the Notifications