நொய்டாவில் டிசிஎஸ் என்ஜினியர் அங்கித் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
நொய்டா: நொய்டாவில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சாப்ட்வேர் என்ஜினியர் அங்கித் சவ்ஹான் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அங்கித் சவ்ஹான்(27) என்பவர் நொய்டாவில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கும் ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் என்ஜினியர் பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திங்கட்கிழமை மாலை அங்கித் தனது நண்பர் ககனுடன் செக்டர் 135ல் இருக்கும் தனது மனைவியின் அலுவலகத்திற்கு சென்று அவரை பார்த்து பேசினார். அதன் பிறகு அங்கித் தனது எஸ்.யு.வி. காரில் ககனுடன் செக்டர் 77ல் இருக்கும் தனது வீட்டிற்கு கிளம்பினார்.
மாலை 4.30 மணி அளவில் அங்கித்தின் காரை ஒரு கார் முந்திச் சென்றுள்ளது. அப்போது அவர்கள் அங்கித்தின் காரில் உள்ள முன்பக்க கண்ணாடியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் நிலைதடுமாறிய அவர் காரை மரத்தின் மீது மோதினார். அப்போது மற்றொரு காரில் இருந்தவர்களில் ஒருவர் இறங்கி வந்து அங்கித்தை நோக்கி சுட்டார்.
இதில் அவரின் கழுத்து மற்றும் கையில் குண்டுபாய்ந்தது. உடனே குற்றவாளிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். ககனுக்கு கார் ஓட்டத் தெரியாததால் அவர் அந்த வழியாக வந்தவர்களிடம் உதவி கேட்டு அங்கித்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அங்கித்தின் குடும்பத்தார் மற்றும் ககனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த கொலை தனிப்பட்ட விரோதத்தால் திட்டமிட்டு செய்யப்பட்டது போல் உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications