என்ஜின் பழுது.. மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. கொல்கத்தாவில் 4 மணி நேரமாக தவித்த பயணிகள்!
கொல்கத்தா: சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் சோதனை மேற்கொண்ட போது, இடதுபக்க என்ஜினில் கோளாறு இருந்தது தெரியவந்தது. இதன்பின் 4 மணி நேரத்திற்கு பின் பயணிகள் கொல்கத்தா விமான நிலையத்திலேயே தரை இறக்கப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பாக அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் டேக் ஆஃப் ஆகிய சில நொடிகளில் விழுந்து நொறுங்கி வெடித்தது. இந்த விமானம் மேகானி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்தது. இதன் காரணமாக விமானத்தில் பயணித்த 241 பேட், மாணவர்கள் சுமார் 15க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதுவரை விமானத்தில் பயணித்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் உயிரிழந்த உறவினர்களுக்கு இறுதி சடங்குகளை நடத்த முடியாமல் குடும்பத்தினர் சோகத்தில் இருக்கின்றனர். இதனால் விமானத்தில் பயணம் செய்வதே மக்களிடையே பீதியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏர் இந்தியாவின் Al180 விமானம் திட்டமிட்டபடி சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இதன்பின் நள்ளிரவு 12.40 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
அப்போது விமானத்தின் இடதுபக்க என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன்பின் 4 மணி நேரமாக விமானத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இறுதியாக பாதுகாப்பு நலன் கருத்தி அதிகாலை 5.20 மணிக்கு பயணிகள் விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விமான பயணிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அகமதாபாத் விமான விபத்து நடந்த சில நாட்களிலேயே மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது பல்வேறு விவாதங்களையும், ஏர் இந்தியா விமான சேவையின் நம்பகத்தன்மை மீதும் கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications