ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம்! ஞாயிறு சந்தையில் கையெறி குண்டு வீச்சு- 10 பேர் படுகாயம்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஶ்ரீநகரில் சுற்றுலா பயணிகள் பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. இந்த புதிய அரசு அமைந்தது முதலே பயங்கரவாதிகள் வெறியாட்டம் தீவிரமாகி வருகிறது. இதனால் ஒமர் அப்துல்லா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்டகாலமாக பயங்கரவாத நடவடிக்கைகளின் மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பா கமாண்டர் நேற்று பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான இந்த மோதலில் சிஆர்பிஎப் வீரர்கள், போலீசார் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த படுகொலைக்கு பழிவாங்கும் வகையில்தான் இன்று ஶ்ரீநகர் ஞாயிற்றுக்கிழமை சந்தையில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் படுகாயமடைந்தனர். ஶ்ரீநகர் ஞாயிற்றுகிழமை சந்தையில் சுற்றுலா பயணிகள் பெருமளவு கூடியிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே ஜம்மு காஷ்மீர் புதிய அரசை கவிழ்க்கும் சதித் திட்டத்துடன் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா எம்பி சந்தேகம் எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications