வாஜ்பாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய வெளிநாட்டு தலைவர்கள்
தங்க நாற்கரசாலை நாயகர் என போற்றப்படும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் ஸ்மிரிதி ஸ்தலம் பகுதியில் தகனம் செய்யப்பட்டது.
டெல்லி: தங்க நாற்கரசாலை நாயகர் என போற்றப்படும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் ஸ்மிரிதி ஸ்தலம் பகுதியில் வேத மந்திரங்கள் முழங்க முப்படை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் பூட்டான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிதான் உள்ளிட்ட அண்டை நாட்டு தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் இரவு 9.30 மணியளவில் கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் நேற்றிரவே வாஜ்பாயின் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அண்டை நாட்டு தலைவர்கள்
இதைத்தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அண்டை நாட்டு தலைவர்கள் வாஜ்பாயின் உடலுக்கு இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.

பாஜக அலுவலகம்
பின்னர் அவரது உடல் முப்படை மரியாதையுடன் கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் இருந்து பண்டிட்தீன் தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் ஊர்வலமாக பாஜக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இறுதி யாத்திரை தொடக்கம்
பிற்பகல் வரை பாஜகவினர், பொதுமக்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடல் ராஜ்காட் அருகே உள்ள விஜய்காட் பகுதிக்கு இறுதியாத்திரையாக எடுத்து செல்லப்பட்டது.

நடந்து சென்ற மோடி
பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் முன்னே நடந்து செல்ல முப்படை வீரர்கள் மரியாதையுடன், லட்சக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ வாஜ்பாயின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

இறுதி அஞ்சலி
ஸ்திரிதி ஸ்தலம் பகுதியில் தகனத்திற்கு முன்னதாக வைக்கப்பட்ட வாஜ்பாயின் உடலுக்கு முப்படை தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பூட்டான் மன்னர் அஞ்சலி
வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் அண்டை நாடுகளின தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு பூட்டான் மன்னர் ஜிக்மே வாங்சுக் இறுதி அஞ்சலி செலுத்தினார். வாஜ்பாய் உடலுக்கு ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், வங்கதேச அமைச்சர் அபுல் ஹாசன் மகமூத் அலி, இலங்கை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வேத மந்திரங்கள் முழங்க
இதைத்தொடர்ந்து முப்படையினரின் மரியாதையுடன் ஸ்மிரிதி ஸ்தலம் பகுதியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல், வேதமந்திரங்கள் முழங்க அவர்களின் குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications