வாய்ப்பில்ல ராஜா.. ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிரான மனு.. தள்ளி போகிறது விசாரணை
ராஞ்சி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் அவர் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனையடுத்து அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி கொடுத்தது.

இப்படி இருக்கையில், எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வை முன்கூட்டியே கணித்த சோரன், கடந்த ஆண்டு தானே முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டமன்றத்தில் நடத்தினார். இதில் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் அவரது ஆட்சி தப்பியது. இருப்பினும், வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை 9 முறை சம்மன்களை அனுப்பியிருந்தது.
இதற்கிடையில், கடந்த 20ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அதை தொடர்ந்து கடந்த 29ம் தேதி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டை மேற்கொண்டனர். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த போதிலும் அதிரடி ரெய்டு மேற்கொண்டதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் விமர்சித்தனர்.
இந்த ரெய்டில், பிஎம்டபிள்யூ சொகுசு கார், ரூ.36 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதிகாரிகள் ராஞ்சியில் உள்ள சோரனின் இல்லத்தில் வைத்து அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு குறுக்கீடு ஏற்படக்கூடாது என்பதற்காக அவரது இல்லத்தை சுற்றி 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதெல்லாம், சோரன் விரைவில் கைது செய்யப்படலாம் என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர்.
அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்த சோரன், டெல்லியில் உள்ள தனது வீட்டில் அமலாக்கத்துறை சட்டவிரோதமாக சோதனை நடத்தி பொருட்களை எடுத்துச் சென்றதாக ஜார்க்கண்ட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சலசலப்புகளின் முடிவில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ஆளுநர் மாளிகைக்கு சென்றபோது கூட அவருடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர். இப்படி இருக்கையில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசேகர் மற்றும் அனுபா ராவத் சவுத்ரி ஒத்தி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications