மே. வங்க 3ம் கட்டத் தேர்தலில் வன்முறை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் பலி... 7 பேர் காயம்
கொல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் 62 தொகுதிகளுக்காக இன்று நடைபெற்ற 3ம் கட்ட வாக்குப்பதிவில், வாக்குச்சாவடி ஒன்றில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கையெறி குண்டு வீசி நடத்திய தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5மாநிலங்களுக்கான, சட்டசபை தேர்தல் கடந்த மார்ச் மாதம் 4ம்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மேற்கு வங்கத்தில் 6கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

ஏற்கனவே, இம்மாதம் 4ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டத் தேர்தல் முடிந்து விட்ட நிலையில், இன்று 62 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது.
மூர்ஷிதாபாத், நடியா, பர்த்வான் மற்றும் கோல்கட்டாவில் உள்ள 7 தொகுதிகள் உள்பட மொத்தம் 62 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்த 62 தொகுதிகளில் 34 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 418 பேர் போட்டியிட்டனர்.
1.37 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதிகளில், 16,641 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளுக்காக துணை ராணுவத்தினர் 75,000 பேர் உள்பட ஒரு லட்சம் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனபோதும் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
மாலை 5 மணி வரை பதிவான வாக்குகளின் அடிப்படையில் 79.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications