1962 போல நினைக்கிறீர்களா? "இப்போ நாங்க வேற மாதிரி".. சீனாவை எச்சரித்த அருணாச்சலப் பிரதேச முதல்வர்
இட்டாநகர்: "1962-ம் ஆண்டு உங்களிடம் (சீனா) தோற்றுப் போன இந்தியா என எங்களை இப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இப்போதைய இந்தியா வெகுவாக மாறிவிட்டது. சீண்ட நினைக்காதீர்கள்" என்று அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு எச்சரித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்துக்குள் சீனா அத்துமீறி நுழைந்திருந்த நிலையில், முதல்வர் பெமா காண்டு இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீன அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ள போதிலும், இதுகுறித்து அந்நாடு மவுனம் சாதித்து வருகிறது.

வாலாட்டும் சீனா
லடாக்கில் இருந்து தனது படைகளை வாபஸ் பெற்ற நிலையில், தற்போது அருணாச்சலப் பிரதேசம் மீது தனது கவனத்தை குவித்துள்ளது சீனா. அந்த வகையில், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியை கைப்பற்றும் நோக்கில் 300 சீனப் படையினர் கடந்த 9-ம் தேதி அங்கு அத்துமீறி நுழைந்துள்ளனர். ஆனால், வெறும் 50 இந்திய ராணுவ வீரர்கள் இணைந்து சீனப் படையினரை அடித்து விரட்டினர். 4 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் நேற்று இரவு தான் தெரிவித்தது.

மோடி ஆட்சி இருக்கும் வரை..
சீனாவின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தவாங் பகுதிக்குள் நுழைந்த சீனப் படையினர் இந்திய ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மோடி ஆட்சி இருக்கும் வரை சீனாவால் இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட எடுக்க முடியாது" எனக் கூறினார்.

"1962 போல நினைக்காதீர்கள்"
இந்நிலையில்தான், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு சீன அத்துமீறல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 1962-ம் ஆண்டு இந்தியா மீது சீனா படையெடுத்தது. அப்போது சீனாவுடன் இந்திய ராணுவம் கடுமையாக சண்டையிட்டது. இருந்தபோதிலும், அந்தப் போரில் இந்தியா நூலிழையில் தோற்றுப் போனது. அந்த சமயத்தில், இந்திய ராணுவம் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை.

"பதிலடி வேறு மாதிரி இருக்கும்"
ஆனால், இப்போதோ வல்லரசு நாடுகளுக்கு இணையான ராணுவத்தையும், வீரம் மிகுந்த படைபலத்தையும் இந்தியா பெற்றிருக்கிறது. இப்போதும் 1962-இல் இருந்த இந்தியாவை போலவே சீனா நினைக்க வேண்டாம். இன்றைய இந்தியா வெகுவாக மாறிவிட்டது. சீண்டி பார்க்க நினைத்தால், எங்கள் ராணுவ வீரர்கள் உங்களுக்கு கொடுக்கும் பதிலடி இரட்டிப்பாக இருக்கும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு பெமா காண்டு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications