மத்திய அரசின் ஜல்லிக்கட்டு அறிவிக்கை ரத்து நடவடிக்கையை ஏற்குமா சுப்ரீம் கோர்ட்? அடுத்து என்ன
டெல்லி: மத்திய அரசு ஜல்லிக்கட்டு காளை குறித்து பிறப்பித்திருந்த இரு அறிவிக்கைகளை ரத்து செய்து அதுகுறித்த தகவலை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்ய உள்ளது. இதை கோர்ட் ஏற்கவும், வாய்ப்புள்ளது, நிராகரிக்கவும் வாய்ப்புள்ளது. இரு முடிவுகளினாலும் சாதக, பாதகங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக 2011ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்ட அறிவிக்கை, அதை மறுதலிக்கும் விதமாக 2016ல் தற்போதைய மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை ஆகிய இரண்டையுமே, நேற்று அரசு ரத்து செய்தது. இந்த சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அறிவிக்கைகளை ரத்து செய்த விஷயத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்யும். அதை உச்சநீதிமன்றம் ஏற்கலாம், அல்லது அதை டிஸ்மிஸ் செய்யலாம். ஏற்றுக்கொண்டால் இதுதொடர்பாக நடைபெற்று, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு தானாகவே முடிந்துவிடும். பிறகு ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகளில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இருக்காது. மாநில அரசே அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம்.
அதேநேரம், அறிவிக்கை ரத்து உத்தரவை, கோர்ட் ஏற்க மறுத்தால், மாநில அரசு இரு தினங்கள் முன்பு சட்டசபையில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து வழக்குகள் தொடர வாய்ப்பு உருவாகும். அப்போது, அந்த வழக்குகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து எதிர்கொள்ள வேண்டிவரும். அப்படி எதிர்கொண்டாலும், அறிவிக்கைகள் ரத்தாகாது, ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்களுக்கு வசதியாகிவிடும். ஏனெனில் 2014ல் ஜல்லிக்கட்டு ஒரு மிருகவதை என்ற அடிப்படையில் அதை நிறுத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. எனவே அந்த உத்தரவை காரணம் காட்டி மீண்டும் தமிழக அரசு சட்டத்தை ரத்து செய்ய ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் வாதிட முடியும். எனவே ஜல்லிக்கட்டு பிரச்சினை பெருமளவுக்கு ஓய்ந்துவிட வேண்டுமானால், மத்திய அரசு அறிவிக்கைகளை ரத்து செய்ததை சுப்ரீம் கோர்ட் ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
