"இதுதான் தாய் பாசம்.." உயிர் போகும் சமயத்திலும் மகனை விடாத தாய்! படகு விபத்தில் உறைய வைக்கும் போட்டோ
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் பர்கி அணை அருகே நர்மதா நதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளின் போது கண்டெடுக்கப்பட்ட தாயின் உடல் காண்போரைக் கண்கலங்கச் செய்துள்ளது. அந்த தாய் மரணத்தின்போதும் தனது மகனை விடாமல் பிடித்திருந்த காட்சிகள் மீட்புப் படையினரைக் கலங்க வைத்திருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தின் பர்கி அணை (Bargi Dam) பகுதியில் நர்மதா நதியில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென வானிலை மாறியது. பலத்த காற்றுடன் கூடிய புயல் வீசியதால் நிலைதடுமாறிய படகு, கண்ணிமைக்கும் நேரத்தில் நீரில் மூழ்கத் தொடங்கியது. படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், பயணிகள் பலர் உயிரிழந்தனர்.

தாய்- மகன்
மீட்புப் படையினர் இன்று காலை நதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, காணாமல் போன டெல்லியைச் சேர்ந்த ஒரு தாயும் அவரது 4 வயது மகனும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். மரணத்தின் விளிம்பிலும் தனது குழந்தையைக் காப்பாற்றப் போராடிய அந்தத் தாய், குழந்தையைத் தனது நெஞ்சோடு இறுக்கி அணைத்தபடி உயிரிழந்திருந்தது மீட்புக் குழுவினரையே கலங்க வைத்துள்ளது. இவர்கள் டெல்லியில் இருந்து வந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.. இந்த விபத்தில் தந்தை மற்றும் மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தாயும் மகனும் லைஃப் ஜாக்கெட் போட்டிருந்த போதும் உயிரிழந்தனர். இது பலருக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த சூழலில், இருவரும் ஒரே லைஃப் ஜாக்கெட்டை போட்டிருந்ததாகவும் இதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் மகாராஷ்டிர அமைச்சர் கூறியிருக்கிறார்.

என்ன நடந்தது
இந்த விபத்தில் இருந்து அதிசயமாக உயிர் தப்பிய சையத் ரியாஸ் ஹுசைன் என்பவர் அந்தப் பயங்கரமான நிமிடங்களை விவரித்தார்.. இது தொடர்பாக அவர் கூறுகையில், "வானிலை திடீரென மோசமடைந்ததால் படகு சமநிலை இழந்து தண்ணீர் நிரம்பத் தொடங்கியது. யாராலும் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியவில்லை; எங்கும் அலறல் சத்தம்... மக்கள் உதவிக்காகக் கதறினர்" என அவர் கூறினார்.
பலர் மாயம்
படகு மூழ்கியபோது ஒரு இடத்தில் சிக்கிக்கொண்ட ரியாஸ், தனது தலை மட்டும் நீருக்கு மேல் இருக்குமாறு சுமார் இரண்டு மணி நேரம் போராடியுள்ளார். பிணங்கள் மிதந்து செல்வதைக் கண்டபடி உயிருக்குப் போராடிய அவரை, மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். இருப்பினும், அவரது மனைவி, மாமியார் மற்றும் பேரன் ஆகியோர் இன்னும் காணவில்லை. இவர்களைப் போல இன்னும் பலர் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது
தற்போதைய நிலவரம் என்ன
இதுவரை 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 குழந்தைகள் உட்பட இன்னும் 9 பேர் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகின் கேப்டன் மகேஷ் படேல் தன்னிடம் இருந்த உயிர் காக்கும் கவசம் காரணமாக உயிர் தப்பினார். தற்போது மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் போலீஸார் இணைந்து மாயமானவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சுற்றுலாப் பயணங்களின் போது படகுகளில் போதுமான உயிர் காக்கும் கவசங்கள் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த விபத்தின் போது கூட அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் உயிர்காக்கும் லைப் ஜாக்கெட் படகு மூழ்கத் தொடங்கிய பிறகே வழங்கப்பட்டது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications