அதிமுக இரட்டை இலை சின்னம்: டெல்லி தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் பிரதிநிதிகள் நேரில் ஆஜர்!
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணையை இந்திய தேர்தல் ஆணையம் தற்பொது நடத்தி வருகிறது. டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சிவி சண்முகம் எம்பி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் ஆஜராகி உள்ளனர்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் அதிமுகவின் தொண்டர்களால்தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இதனால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை, எடப்பாடி பழனிசாமி தரப்பு பயன்படுத்தக் கூடாது; எடப்பாடி பழனிசாமி தரப்பு, இரட்டை இலையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என அதிமுகவின் சூரியமூர்த்தி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி, ஓ.பன்னீர்செல்வம், ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திலும் அதிமுக பொதுச்செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக மனு கொடுத்தனர். மேலும் இந்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டது. இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என அனுமதித்தது.
இந்த வழக்கில்தான் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது டெல்லியில் இறுதி விசாரணை நடத்தி வருகிறது. இந்த இறுதி விசாரணையில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்ட மனுதாரர்கள் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சிவி சண்முகம் எம்பி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி உள்ளனர்.
முன்னதாக இரட்டை இலை சின்னம், உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து அதிமுக, பொது செயலாளர் எடிப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் கட்சியில் பிளவுகள் உள்ளதா என திருப்தி அடைந்த பிறகே விசாரணையை தொடர வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications