For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட செய்தியை வெளியிடுவதில் மீடியாக்கள் தடுமாறியது ஏன்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக முதலில் மீடியாக்களில் தகவல் வெளியாகிய நிலையில், சற்று நேரத்திலேயே ஜாமீன் மறுக்கப்பட்ட உண்மை தகவல் வெளியானது. இதற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் ஜாமீன் மனு மீதான வக்கீல்களின் வாதம் மதியம் 3.30 மணிக்கு ஹைகோர்ட்டில் முடிந்தது. வாதம் முடியும்போது அரசு வக்கீல் பவானிசிங், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார்.

Two reasons behind Jayalalitha's bail plea confusion news in the medias

இதையடுத்து கோர்ட்டுக்குள் உட்கார்ந்திருந்த அதிமுக வக்கீல்கள் முகத்தில் மலர்ச்சி தென்பட்டது. கோர்ட்டில் இருந்த பத்திரிகையாளர்கள் அதிலும் டிவி மீடியா ரிப்போர்ட்டர்கள், ஜெயலலிதாவுக்கு பெயில் கிடைப்பது கேரண்டி என்று தங்கள் அலுவலகங்களிலுள்ள தலைமை நிருபர்களுக்கும், எடிட்டர்களுக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பினர்.

ஏனெனில், 10 வருடங்களுக்கு குறைவான சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வக்கீல் கருத்தை கேட்காமலே நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியும் என்பது சட்ட விதி. ஆனால் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு 4 வருட சிறை தண்டனைதான் வழங்கப்பட்டுள்ளதாலும், அரசு வக்கீல் திடீர் பல்டி அடித்ததாலும், ஜாமீன் வழங்குவது உறுதி என்பது ரிப்போர்ட்டர்கள் கணிப்பாக இருந்தது.

அப்போது சில அதிமுக ஆதரவு வக்கீல்கள், கோர்ட்டுக்கு வெளியே ஓடி வந்து அங்கிருந்த ரிப்போர்ட்டர்களிடம், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியாகிவிட்டது என்று தெரிவித்தனர். இதை நம்பி அந்த நிருபர்கள் ஜாமீன் கிடைத்துவிட்டதாக அலுவலகங்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்துதான் செய்தி சேனல்களிலும், பத்திரிகை வெப்சைட்டுகளிலும் ஜாமீன் கிடைத்ததாக நியூஸ் பிளாஷ் செய்யப்பட்டது.

ஆனால் அப்போதுதான் நீதிபதி தனது தீர்ப்பை வாசிக்க தொடங்கியிருந்தார். இந்த இடைவெளியில், நாடு முழுவதும், ஜாமீன் கிடைத்துவிட்டதாகவும், அதுகுறித்து நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது. தமிழக எதிர்க்கட்சிகளின் சேனல்களில் கூட இதே பிளாஷ் ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால், நீதிபதி மாலை 4.15 மணியளவில் தீர்ப்பை வாசித்து முடித்தபோது, அங்கிருந்த அதிமுக வக்கீல்களுக்கு மட்டுமல்ல, முன்கூட்டியே கணித்த மற்றும் வக்கீல்கள் சொன்னதை கேட்ட பத்திரிகையாளர்களுக்கும் முகத்தில் ஈயாடவில்லை.

அன்னா ஹசாரே போராட்டங்களுக்கு பிறகு ஊழலுக்கு எதிரான பார்வை இந்தியா முழுக்க மாறியுள்ளது. எனவே உச்சநீதிமன்றமும் ஊழலுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரிலேயே ஊழல் வழக்கில் அதுவும் முக்கியஸ்தர்களின் ஊழல் வழக்குகளில் சமீபகாலமாக கோர்ட் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.

எனவேதான், அரசு வக்கீலே பல்டி அடித்தாலும், ஊழலுக்கு எதிராக நீதிமன்றம் தனது நிலையை மாற்றாது என்று ஹைகோர்ட் நீதிபதி சந்திரசேகரா, கண்டிப்புடன் கூறிவிட்டார். இதுதான் வழக்கில் ஏற்பட்ட திடீர் மாற்றத்துக்கு காரணம். செய்தியை முந்தித்தர வேண்டும் என்ற தொழில்போட்டி காரணமாக இவ்வாறு தவறான தகவலை முதலில் அனைத்து மீடியாக்களும் பரப்பிவிட்டன. சில மீடியாக்கள், கோர்ட்டுக்குள் உள்ள நிருபர்களிடம் தொடர்புகொண்டு 'காலத்தை விரையம்' செய்ய வேண்டாமே என்று நினைத்து, பிற மீடியாக்கள் பிளாஷ் போட்டவுடன் அவையும் போட்ட கதையும் நடந்தது.

ஆனால், 27ம்தேதி ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கியபோது, ஒன் இந்தியா தமிழ் வெப்சைட் உட்பட தமிழ் மீடியாக்கள் அனைத்தும் கடைசிவரை காத்திருந்து அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பு வக்கீல் தீர்ப்பை தெரிவித்த பிறகே செய்தி வெளியிட்டன. இத்தனைக்கும், ஒன் இந்தியா உட்பட பெரும்பாலான தமிழ் ஊடக செய்தியாளர்களுக்கு, கோர்ட்டுக்குள் தீர்ப்பு மதியம் அறிவிக்கப்பட்ட உடனேயே, சில 'வட்டாரங்கள்' மூலம் அதுகுறித்து தெரியத்தான் செய்தது.

ஆனாலும் கன்னட டிவி சேனல்கள் செய்தி வெளியிட்ட பிறகும்கூட, பொறுமை காத்துதான் தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் ஜாமீன் மனு விசாரணையில் குழப்பம் ஏற்பட, அரசு வக்கீலின் பல்டியும், அதிமுக ஆதரவு வக்கீல்கள் பேட்டியுமே முக்கிய காரணமாகிவிட்டது.

English summary
Public prosecutor's sudden u turn and the pro Aiadmk lawyers statements are the reasons behind Jayalalitha's bail plea confusion in the media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X