வாசலில் விளையாடிய 2 வயது சிறுமியை கடித்துக் குதறிக் கொன்ற தெரு நாய்கள்... ஆந்திராவில் சோகம்!
ஹைதராபாத்: ஆந்திர கிராமம் ஒன்றில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமியை தெரு நாய்கள் சேர்ந்து கடித்துக் குதறி கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரமாநிலம் கிருஷ்ணா மாவட்டம் காஞ்சிகச்சேர்லா மண்டலத்தில் உள்ள வெமுலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி அனன்யா.
இச்சிறுமி நேற்று தனது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சென்ற தெருநாய்க் கூட்டம் அச்சிறுமியைத் தாக்கியுள்ளது. பின்னர் அங்கிருந்து அச்சிறுமியை அருகில் உள்ள புதருக்கு அந்த நாய்கள் கூட்டம் இழுத்துச் சென்று போட்டுள்ளது.

சிறிது நேரம் கழித்து சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது அருகில் இருந்த புதருக்கு பின்புறம் பலத்த காயம் அடைந்த நிலையில் அவரை மீட்டுள்ளனர். ஆனால், சிறிதுநேரத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டுவாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தெரு நாய்க் கூட்டத்திற்கு பலியான சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைந்து தெரு நாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications