அஜ்மல் கசாப்புக்கு பிரியாணி கொடுத்தவங்களோட கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே: அமித்ஷா 'பொளேர்’ தாக்கு
புனே: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தீவிர பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. புனேவில் இன்று பாஜக மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, உத்தவ் தாக்கரே- சரத்பவார் கூட்டணியை மிக கடுமையாக விமர்சித்தார். மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் ரசிகர் மன்றத்தை உத்தவ் தாக்கரேதான் வழிநடத்துவதாகவும் மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு பிரியாணி வாங்கி கொடுத்தவர்களுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்துள்ளதாகவும் அமித்ஷா காட்டமாக பேசினார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்பது எதிர்பார்ப்பு. இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநில அரசியல் கட்சிகளும் தேர்தல் களப் பணிகளைத் தொடங்கிவிட்டன.

மகாராஷ்டிராவின் புனேவில் பாஜகவின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுப் பேசியதாவது: மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் ரசிகர் மன்றத்தில் யார் இணைந்துள்ளது? மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி- தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தானின் அஜ்மல் கசாப்புக்கு சிறைக்குள் பிரியாணி வாங்கிக் கொடுத்தது யார்? மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேனனுக்கு கருணை காட்ட சொன்னது யார்? சர்ச்சைக்குரிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக்குக்கு, தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை ஆதரிக்கிற ஜாகீர் நாயக்குக்கு அமைதி விருது கொடுத்தது யார்? இத்தகைய நபர்களுடன் அமர்ந்திருப்பதற்காக உத்தவ் தாக்கரே வெட்கப்பட வேண்டாமா?
பொய்யான தகவல்களை பரப்பி தேர்தலில் வெல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். ஊழலைப் பற்றி எல்லாம் அவர்கள் பேசுகிறார்கள். இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழல்வாதியே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்தான். இதை சொல்வதில் எனக்கு எந்த ஒரு குழப்பமும் இல்லை. ஏன் தெரியுமா? ஏனெனில் இந்த நாட்டில் ஊழல் என்பதை நிறுவனமயமாக்கியவரே சரத் பவார்தான்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ராகுல் காந்தியின் ஆணவம் அடக்கப்படும். லோக்சபா தேர்தலில் ஹரியானா, ஜார்க்கண்ட் மாநில மக்கள் பிரதமர் மோடிக்குதான் ஆதரவு தந்துள்ளனர். ஒவ்வொரு பாஜக தொண்டரும் கட்சியின் வெற்றிக்காக உழைத்தாக வேண்டும். 2014, 2019 சட்டசபை தேர்தல்களை விட பிரம்மாண்ட வெற்றியை பாஜக பெற வேண்டும். மகாராஷ்டிராவில் காவி கொடி மீண்டும் உதயமாக வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.












Click it and Unblock the Notifications