ஜார்க்கண்ட்: ஜிதன் ராம் மஞ்சியின் கட்சியும் போட்டி- பாஜக அணியில் தொகுதி பங்கீட்டில் திணறல்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியும் களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டில் பாஜக விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறதாம்,. பீகாரை சேர்ந்த ஜேடியூ, மஞ்சியின் ஹிந்துஸ்தான் ஆவாமி மோர்ச்சா ஆகியவை ஜார்க்கண்ட் தேர்தலில் களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் அறிவிக்கக் கூடும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது.
கடந்த சில தேர்தல்களில் பாஜக அதிகமான இடங்களில் போட்டியிட்டு வந்தது. ஆனால் இந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் அடுத்தடுத்து எங்களுக்கு ஜார்க்கண்ட்டில் இத்தனை தொகுதிகள் ஒதுக்கியாக வேண்டும் என நெருக்கடி தருவதால் அக்கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது.
பீகாரில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சிதான் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு அமைய உதவிய கட்சிகளில் ஒன்று. தற்போது ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் தங்களுக்கு 11 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என நிதிஷ்குமார் அடம்பிடிக்கிறார். நிதிஷ்குமார் பாணியில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியும் தமது ஹிந்துஸ்தானி ஆவாமி மோர்ச்சாவும் ஜார்க்கண்ட் தேர்தலில் போட்டியிடும் என அறிவித்துள்ளார்; மேலும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் தங்களது கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்கிறார் மாஞ்சி.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 41 இடங்கள். பாஜக கூட்டணி கட்சிகளே 11, 10 தொகுதிகள் என வேண்டும் என அடம் பிடிப்பதால் பாஜகவால் 60 தொகுதிகளில்தான் போட்டியிடக் கூடிய நிலைமை உருவாகலாம். இதனை எப்படி ஒப்புக் கொள்வது? என்கிற விழிபிதுங்கலுடன் பாஜக போராடிக் கொண்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications