‘நான் அவனில்லை’ பட பாணியில் 3 பெண்களை ஏமாற்றித் திருமணம்.. உ.பி. தொழிலதிபர் கைது!
சினிமா பாணியில் மூன்று பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் சமீர் என்ற தொழிலதிபர். இவர் தொழில் நிமித்தம் உத்தரப்பிரதேசத்தில் தனது மனைவி அப்ஷாவுடன் வாழ்ந்து வந்தார். சமீபகாலமாக சமீரின் நடவடிக்கைகளில் அப்ஷாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனது கணவர் வேறொரு பெண்ணுடன் பழகுகிறாரோ என அவர் சந்தேகித்தார்.

அவரது சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் அடிக்கடி சமீருடன், நேகா என்ற பெண் செல்போனில் பேசியுள்ளார். கணவருக்குத் தெரியாமல் நேகாவின் போன் நம்பரை அவரது செல்போனில் இருந்து எடுத்தார் அப்ஷா.
பின்னர் நேகாவுடன் அவர் போனில் பேசினார். அப்போது, சமீரின் செல் நம்பரை தனது கணவருடையது என்று கூறிய நேகா, தான் சமீரின் தம்பி மனைவி என்றும், இதுவரை சமீரை நேரில் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பினாலும், பின்னர் அப்ஷாவுக்கும், நேகாவுக்கும் சமீர் தங்களை ஏமாற்றியது புரிந்தது. ஒரே ஆள், இருவேறு பேரில் தங்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையே சமீருக்கு யாஸ்மின் என்ற பெண்ணுடன் தொடர்பு இருப்பதையும் பேஸ்புக் மூலம் அப்ஷா தெரிந்து கொண்டார்.
இது தொடர்பாக சமீரிடம் அவர் கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டே, 'ஆம் எனக்கு ஒன்பது மனைவிகள் இருக்கின்றனர். நீ அதில் ஏழாவது மனைவி' எனத் தெரிவித்துள்ளார். அவர் நகைச்சுவையாக கூறுவது போல் சமாளித்துப் பேசியுள்ளார். அதோடு சமீரின் வங்கிக் கணக்கில் இருந்து பலமுறை நேகாவிற்கும், யாஸ்மினுக்கும் பணப்பரிமாற்றம் நடந்ததையும் அப்ஷா கண்டுபிடித்தார்.
அதனைத் தொடர்ந்து நேகாவை நேரில் சந்தித்தார் அப்ஷா. இருவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டது தொடர்பாக சமீர் மீது போலீசில் புகார் அளித்தனர். அதில், 'சமீர் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், மேலும் பல பெண்கள் அவரால் ஏமாற்றப் பட்டிருக்கலாம்' என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
அப்புகாரின் பேரில் சமீரைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், 'நான் ராஜஸ்தானைச் சேர்ந்தவன். வேடிக்கைக்காக என் மனைவியிடம், எனக்கு ஒன்பது மனைவிகள் இருப்பதாகக் கூறினேன். உண்மையில் எனக்கு மூன்று மனைவிகள் தான் உள்ளனர்' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தொழிலதிபர் ஒருவர் மூன்று பெண்களை வெவ்வேறு பெயர்களில் ஏமாற்றித் திருமணம் செய்தது உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நான் அவனில்லை' படம் பாணியில் பெண்களை ஏமாற்றி, சமீர் திருமணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications