40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: ராஜ்யசபாவில் வைகோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அல்லது நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி வலியுறுத்தினார்.

ராஜ்யசபாவில் வைகோ பேசியதாவது: இந்த முக்கியமான மசோதாவில் பேச எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மசோதா, குடியேற்றம் தொடர்பான முந்தைய நான்கு சட்டங்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதா கட்டற்ற அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

மிதமிஞ்சிய அதிகாரங்கள்

மசோதாவின் பிரிவு 3, குடியேற்ற அதிகாரிகளுக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குகிறது. அதில், சமநிலையை நிலை நிறுத்த வேண்டும். ஏனெனில் அது ஒருதலைப்பட்சமாகவோ அல்லது சார்பு நிலைக்கோ சென்றால், வெளிநாடுகளுடனான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும்.

ஒரு குடியேற்ற அதிகாரி அல்லது தலைமைக் காவலர் மட்டத்தில் உள்ள ஒருவருக்கு ஆவணங்களைத் தேடி ஆய்வு செய்து சோதனை நடத்தவும் இப்பிரிவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பிரிவு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும் .

பிடிவாரண்ட் இல்லாமல் கைது

தனி நபர் ஒருவர் குடியேற்றச் சட்டங்களை மீறுவதாக சந்தேகிக்கப்பட்டால், பிடியாணை இல்லாமல் அவர்களைக் கைது செய்ய குடியேற்ற அதிகாரிகளுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. இதனால், தன்னிச்சையான தடுப்புக் காவல் மூலம் தனிப்பட்ட சுதந்திரம் பாதிப்படையும் என்று கவலைப்படுகிறேன்.

நமது குடிமக்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கைவிலங்குகளுடன், சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற, கண்ணியமற்ற முறையில் எவ்வாறு நாடு கடத்தப்படுகிறார்கள் என்பதை நாம் காண்கிறோம். இது தான் சர்வதேச அளவில் நம் நிலை.

நாடு கடத்திய டிரம்ப்

ஜனவரி 2025 முதல், 636 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட சீக்கியர்களின் தலைப்பாகைகள் கூட அகற்றுப் பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கூட நாடு கடத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. பயணத்தின் போது, கழிப்பறைக்குச் செல்வது, உணவு மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்ள அவர்கள் சொல்லொணா துயரங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு நாடுகடத்துவதற்கான சர்வதேச விதிகளை மீறி அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டனர்.

கண்டனம் தெரிவிக்காத மோடி

பிப்ரவரி 2025 முதல் வாரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் கைகுலுக்கியபோது, நாடு கடத்தப்பட்டவர்களின் கைகள் விலங்கிடப்பட்டிருந்தன. மேலும் மோடி அவர்கள் அமெரிக்காவில் இருந்த சமயத்திலோ அல்லது அதற்குப் பிறகோ ஒரு கண்டன வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. நமது இந்திய குடிமக்கள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டபோது, இயற்கை நீதியின் அனைத்து அடிப்படை விதிமுறைகளுக்கும், சர்வதேச மரபுகளுக்கும் எதிராக ஒன்றிய அரசின் இந்த வகையான அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

குடியுரிமை (திருத்த) சட்டம், இயற்றப்பட்டபோது, இலங்கையிலிருந்து குடியேறிய இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான ஒரு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.

ஈழத் தமிழரை சட்டவிரோத குடியேறிகளாக முத்திரை குத்த கூடாது

தற்போதைய மசோதா, உள்நாட்டுப் போரின் போது ஈழம், இலங்கையிலிருந்து இந்தியா வந்துள்ள தமிழ் அகதிகளை ஒழுங்குபடுத்துவதையும் கருத்தில் கொள்ளவில்லை. மண்டபம் மற்றும் பிற அகதிகள் - மறுவாழ்வு முகாம்களில் சுமார் 90,000 தமிழ் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தவிக்கின்றனர். நீண்ட கால விசா வழங்குவதற்கு இரக்கமுள்ள மற்றும் நடைமுறை அணுகுமுறை மிகவும் அவசியம். ஏனெனில் அவர்கள் தங்கள் நாட்டில் நடைபெற்ற வன்முறை மற்றும் இன துன்புறுத்தல் காரணமாக கடவுச் சீட்டு இல்லாமல் தப்பி வந்து, இந்தியாவில் அகதிகளாக தங்கி உள்ளனர். நீண்ட கால விசாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து அளவுகோல்களையும் நிறைவு செய்கிறார்கள். அவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று முத்திரை குத்தக்கூடாது. எனவே, 1986 செப்டம்பர் 23 அன்று வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சக உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இந்திய குடியுரிமைக்கு அனுமதி

எனவே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், வெளியிலும் தமிழ் அகதிகள் தவித்து வருவதால், அவர்களின் தற்போதைய சவால்களைப் போக்க, குடியுரிமைச் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் இந்திய குடியுரிமை அல்லது நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+