துணைவேந்தர் மாநாடு: ஆளுநர் ரவிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- காங். கறுப்பு கொடி போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை கூறியதாவது: அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கூடியவர் துணை ஜனாதிபதி. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவர் விமர்சிக்கிறார். வேலியே பயிரை மேயக் கூடாது அல்லவா? இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.

Congress

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ஆளுநருக்கு எதிராக உதகையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை கொடுத்த பின்னரும் அதை மீறி ஆளுநர் ரவி, துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும். ஆகையால் ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடர இருக்கிறோம். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

உதகையில் கறுப்புக் கொடி போராட்டம்

உதகையில் ஆளுநர் ரவிக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுவது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என். ரவி கடந்த மூன்றாண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாடு அரசு வழக்கு

அரசமைப்புச் சட்டப்படி மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும். ஆனால், அவற்றுக்கு விரோதமாக தமிழ்நாட்டில் உள்ள 16 பல்கலைக் கழங்களில் தன்னை வேந்தராக கருதிக் கொண்டு துணை வேந்தர்களுக்கான தேடுதல் குழுவை அமைத்து, துணை வேந்தர்களை நியமித்து வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழக நிர்வாகத்தையும், அதற்கான முழு நிதிச் சுமையையும் ஏற்று செயல்படுகிற தமிழ்நாடு அரசின் துணை வேந்தர்களை நியமிக்கிற அதிகாரத்தை ஆளுநர் பறித்துக் கொண்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

அந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அளவிற்கு அற்புதமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டவிரோதம் என்று கூறியதோடு, முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் பிரிவு 142 இல் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் அதிரடியாக ஒப்புதல் அளித்தனர். இதன்மூலம் கூட்டாட்சியின் செயல்பாடுகளுக்கு வலிமை சேர்த்தனர்.

ஜெகதீப் தன்கர் விமர்சனம்

இத்தீர்ப்பின்படி அமைச்சரவையின் அறிவுரையின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் அவருக்கு கிடையாது என மிகத் தெளிவாக தீர்ப்பை கூறிய பிறகும், தமிழக ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டு செயல்படுவதாக தெரியவில்லை. இந்த தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதை அனைவரும் அறிவார்கள். ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, தலைநகர் தில்லி சென்று, அவரை சந்தித்த பிறகு வருகிற ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு மூன்று நாட்கள் நீலகிரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானதோடு, இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதா?

இதன்மூலம் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இயற்றிய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு கூட்டுச் சதியை அரங்கேற்றியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாக அவமதிக்கிற செயலாகும்.

முதல்வரே வேந்தர்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருக்கிற வகையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து அது சட்டமாக நிறைவேறி தமிழக முதலமைச்சர் வேந்தராக பொறுப்பேற்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் அனைத்து பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் உயர்கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டார்கள்.

போட்டி மாநாடு நடத்தும் ஆளுநர் ரவி

இந்த மாநாட்டிற்கு போட்டியாக தமிழக ஆளுநர் அதே துணை வேந்தர்கள், பதிவாளர்களை அழைத்து மாநாடு கூட்டுவதற்கு ஆளுநருக்கு யார் அதிகாரம் அளித்தார்கள் ? அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் தமிழ்நாடு முதல்வரே வேந்தரான பிறகு, இந்த மாநாட்டை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது ? தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள மறுத்த இந்தி திணிப்பை நோக்கமாகக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை பரப்ப வேண்டுமென்ற நோக்கத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, பல்கலைக் கழக துணை வேந்தர்களின் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

துணை ஜனாதிபதிக்கு கண்டனம்

ஆர்.என். ரவி கூட்டியிருக்கிற மாநாடு ஒரு சட்டவிரோதமான மாநாடாகும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்ததோடு, ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். ஆளுநரின் இத்தகைய சட்டவிரோத செயலுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் துணை போயிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.


உதகையில் கறுப்பு கொடி போராட்டம்

எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிற வகையில் வருகிற ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரியில் நடைபெறுவதை எதிர்த்தும், இம்மாநாட்டை கூட்டுகிற ஆளுநர் ஆர்.என். ரவியின் சட்டவிரோதப் போக்கை கண்டிக்கிற வகையிலும் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஆர். கணேஷ் அவர்கள் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக ஆளுநர் ஆர்.என். ரவியின் தமிழ்நாட்டு நலன்களுக்கு விரோதமாக கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சீரழிக்கும் செயல்களை கண்டிக்கிற வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் காங்கிரஸ் பேரியக்க கொடிகளை கரங்களில் ஏந்தி பங்கேற்று தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+