மம்தாவை வீழ்த்தினாலும்.. சுவேந்துவுக்கு முதல்வர் பதவி கிடைப்பதில் சிக்கல்? பெரிய பிரச்சனை இருக்காமே
கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 15 ஆண்டுக்கால திரிணாமுல் ஆட்சி அங்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து மிக முக்கியமான ஒரு கேள்வி எழுந்துள்ளது. அடுத்து பாஜகவின் முதல்வர் யார் என்பது தான் அந்த கேள்வி! முதல்வர் ரேஸில் சுவேந்து அதிகாரி முந்தினாலும் கூட பாஜக எந்த முடிவை வேண்டும் என்றாலும் எடுக்கும் என்பதால் சர்ப்ரைஸ் காத்திருக்கலாம்.
தமிழ்நாட்டைப் போலவே மேற்கு வங்கத்திலும் இந்த முறை மிகப் பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது. மேற்கு வங்கத்தில் இழுபறி இருக்கும் என்றே பெரும்பாலான சர்வேக்களில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணாமுல் கட்சிக்கு இது மிகப் பெரிய தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.

சுவேந்து அதிகாரி
இதற்கிடையே மேற்கு வங்கத்தின் முதல்வர் யார் என்ற மிக முக்கியமான கேள்வி இப்போது எழுந்துள்ளது. பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சுவேந்து அதிகாரி இருந்த சூழலில், அவரே முதல்வராகத் தேர்வாக வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அவரை தாண்டியும் சிலரது பெயர்களை பாஜக மேலிடம் பரிசீலனை செய்து வருகிறதாம்.
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு பெண் முதல்வரை பாஜக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பைத் தனது பிரசாரத்தின் மையமாக வைத்திருந்த பாஜக, அக்னிமித்ரா பால் மற்றும் ரூபா கங்குலி ஆகியோரின் பெயர்களை ஆலோசனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
பெண் தலைவர்கள்
ஆடை வடிவமைப்பாளரான அக்னிமித்ரா பால், அசன்சோல் தெற்கு தொகுதியை மீண்டும் கைப்பற்றித் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார்.. மம்தா பானர்ஜியை விமர்சிப்பதில் இவர் ஒரு 'அதிரடி' முகம். அடுத்து ரூபா கங்குலி..! மகாபாரதத்தின் திரௌபதியாக அறியப்படும் இவர், முன்னாள் ராஜ்யசபா எம்பி.. நகர்ப்புற மக்களிடையேயும் தொண்டர்களிடையேயும் இவருக்குப் பெரும் வரவேற்பு உண்டு.
சுவேந்து அதிகாரி
பெண் தலைவர்கள் ஒருபுறம் இருக்க, கட்சியில் உள்ள மற்ற சில தலைவர்களும் முதல்வர் ரேஸில் முன்னிலையில் உள்ளனர்.. அதில் முதலில் இருப்பவர் சுவேந்து அதிகாரி தான்.. ஒரு காலத்தில் திரிணாமுல் காங்கிரஸில் மம்தாவின் வலது கரமாக இருந்த இவர், இப்போது மம்தாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். 2021ல் நந்திகிராமில் மம்தாவை வீழ்த்தியவர்.. அடிமட்டத் தொண்டர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர். இப்போது 2026லும் மம்தாவை அவரது சொந்த தொகுதியிலேயே வீழ்த்தியிருக்கிறார். இருப்பினும், நாரதா ஸ்டிங் ஆபரேஷன் போன்ற வழக்குகள் இவருக்குச் சிறு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அடுத்து இருப்பவர் சமிக் பட்டாச்சார்யா.. ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட இவர், கட்சியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரு தலைவராக அறியப்படுகிறார். மூன்றாவது இடத்தில் இருப்பவர் திலீப் கோஷ்.. 2021ல் பாஜகவை வங்கத்தில் ஒரு பிரதான எதிர்க்கட்சியாக மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு. ஆர்எஸ்எஸில் இருந்து வந்த இவரும் ரேஸில் முக்கியமான இடத்தில் இருக்கிறார்.
முதல்வர் யார்!
பெங்காலி ஒருவரே நிச்சயம் மேற்கு வங்க முதல்வர் பதவியில் அமர்வார் என அமித் ஷா கூறியிருந்தார். ஆனால், அது நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட சுவேந்து அதிகாரியா அல்லது பெண்களின் வாக்குகளைக் குறிவைத்து ஒரு பெண் தலைவரா என்பது டெல்லியின் அடுத்த அதிரடி முடிவில்தான் இருக்கிறது!












Click it and Unblock the Notifications