மேற்கு வங்கத்தில் நாளை 2ஆம் கட்ட தேர்தல்! நாளை மாலை 5 மாநில Exit poll கருத்துக்கணிப்புகள் வெளியாகும்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அங்கு 142 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின்றன.
மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.60 கோடி பேர் வாக்குரிமை பெற்று உள்ளனர். அவர்களுக்காக 44,376 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். முதல்கட்டத் தேர்தலில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், மீதம் உள்ள 142 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்காக, மொத்தம் 41,001 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், 3.24 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி உடையவர்கள். இதில் ஆண்கள், 1.64 கோடி; பெண்கள், 1.57 கோடி. அங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இந்நிலையில் அங்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியாளர்கள் வாக்குச்சாவடிகளை நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளனர். இதில், வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி சட்டமன்ற தொகுதியின் தொலைதூர ஆற்று பகுதிகளும் அடங்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்தது.
"அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டன. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு குழுக்கள் தத்தமது வாக்குச்சாவடிகளை நோக்கி பயணித்து வருகின்றன. மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள 123-சந்தேஷ்காலி சட்டமன்ற தொகுதியின் ஆற்று பகுதிகளை சென்றடைய, அவர்கள் படகுகள் மூலம் ஆறுகளை கடந்து செல்கின்றனர்," என்று இந்தியத் தேர்தல் ஆணையம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, மேற்கு வங்கத்தின் தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால், மக்கள் அனைவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார். "அனைவரும் வாக்களிக்க அனுமதிப்பதே இந்திய தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். உங்கள் அனைவரையும் உங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று உங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். எங்கு வன்முறை சம்பவங்கள் பதிவானாலும், அங்கு நாங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
நாங்கள் அனைத்து சவால்களையும் எதிர்கொள்வோம். உயரமான கட்டிடங்களில் வசிப்போர் குறித்த பட்டியலை நாங்கள் பெற்றுள்ளோம். அவர்களில் பெரும்பாலானோர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த உயரமான கட்டிடங்களுக்குள்ளேயே சில வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications