"மனித தவறு.." ஆந்திராவில் ஏற்பட்ட கொடூரமான ரயில் விபத்து.. உண்மையில் என்ன காரணம்! பகீர் தகவல்
விஜயநகரம்: ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு மிக மோசமான ஒரு ரயில் விபத்து அரங்கேறிய நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகில் விரிவான ரயில் நெட்வர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் அனைத்து பகுதிகளுக்கும் ரயில் மூலம் விரைவாகச் சென்றடைய முடியும் என்பதே இதற்குக் காரணமாகும்.

அதேநேரம் அவ்வப்போது இந்தியாவில் நடைபெறும் மிக மோசமான ரயில் விபத்துள் நம்மைப் பதற வைப்பதாகவே இருக்கிறது. அதுபோன்ற ஒரு விபத்து தான் இப்போது ஆந்திராவில் நடந்துள்ளது.
ரயில் விபத்து: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் கண்டகப்பள்ளி என்ற இடத்தில் சிக்னல் பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அதே ரயில் பாதையில் பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில், இரு ரயில்களும் மோதிக்கொண்டன .நின்று கொண்டிருந்த ரயிலின் பின்புறம் பலாசா எக்ஸ்பிரஸ் மோதிய நிலையில், இதில் மொத்தம் 5 பெட்டிகள் தடம் புரண்டன.
இதையடுத்து பேரிடர் மீட்புப் படையினர் தொடங்கி பலரும் மீட்புப் பணிகளில் களமிறங்கினர். இரவு நேரம் என்பதால் மீட்புப் பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தோர் சிகிச்சைக்காக விஜயநகரம் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்.
அச்சம்: இதில் பலரது நிலைமை மிக மோசமாக இருக்கும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கனவே, இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவிகளை அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே இந்த விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
மனித தவறு: நாட்டையே உலுக்கிய இந்த ஆந்திர ரயில் விபத்திற்கு மனித தவறு காரணமாக இருக்கலாம் என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் சிக்னலை மீறிச் சென்றுள்ளது தெரிய வருகிறது. எனவே, இது விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அப்போதுதான் கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்றும் ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில், "மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நிலைமையைக் குறித்து ஆய்வு செய்தார். ஆந்திரப் பிரதேச முதல்வரிடம் விபத்து குறித்துப் பேசினேன்.. மாநில அரசு மற்றும் ரயில்வே குழுக்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மோசமான விபத்து: இந்தியாவில் ரயில் மோசமான ரயில் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்தது. இந்த மோசமான விபத்தில் 280 பேர் உயிரிழந்தனர்.. பலர் காயமடைந்தனர். அந்த விபத்து நடந்து சில மாதங்கள் கூட ஆகாத நிலையில், இப்போது மீண்டும் ஆந்திராவில் இப்படியொரு விபத்து அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவது தொடர் கதையாகியுள்ள நிலையில், இதைத் தடுக்க ரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications