சல்மான் கானின் நடத்தையே அவருக்கு எதிராக திரும்பியது... நீதிபதியின் பரபரப்பு தீர்ப்பு விவரம்
மும்பை: தன்னுடைய நடவடிக்கைகள் தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என்று நடிகர் சல்மான்கான் ஏற்கனவே அறிந்திருக்கிறார் என்று அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை விவரத்தில் நீதிபதி கூறியுள்ளார். சம்பவம் நடந்த பிறகு இடத்தை விட்டு தலைமறைவான சல்மான் கானின் நடத்தையே அவருக்கு எதிராகத் திரும்பியதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நடிகர் சல்மான்கான் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது சல்மான்கான் குடிபோதையில் இருந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் மீது 2003ஆம் ஆண்டு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் புதன்கிழமையன்று நீதிபதி தேஷ்பாண்டே தீர்ப்பு கூறினார்.
விபத்து ஏற்படுத்தியதற்காக சல்மான்கானுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதற்காக 2 மாத ஜெயில் தண்டனையும், ரூ. 500 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். சல்மான்கானுக்கு மாலையே இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட்டதை அடுத்து வீடு திரும்பினார்.

240 பக்க தீர்ப்பு
மும்பை செசன்சு கோர்ட்டு நீதிபதி தேஷ்பாண்டே, சல்மான்கானுக்கு எதிராக கூறப்பட்ட 240 பக்க தீர்ப்பு விவரத்தில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன.

விதிமுறை தெரியும்
குற்றவாளி (சல்மான்கான்) மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த ஒரு நடிகர். லைசென்ஸ் இல்லாமல், மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் வாகனம் ஓட்டக்கூடாது என்ற அடிப்படை விதிமுறைகளை அவர் நன்கு அறிந்தவர்.

முக்கிய சாட்சி
சல்மான்கான் மது அருந்திய ‘ரெய்ன் பார்' மதுபான விடுதிக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம் என்று சாட்சி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

தொழிலாளர்கள்
விபத்து நடந்த அமெரிக்கன் பேக்கரி வழியாக சல்மான்கான் அடிக்கடி காரில் சென்றதாக சாட்சி அளித்த டி.சவ்சா தெரிவித்திருக்கிறார். ஆகையால், அங்கு இரவுநேரத்தில் ஏழை தொழிலாளிகள் படுத்து தூங்கி கொண்டிருப்பார்கள் என்பது அவருக்கு நன்கு தெரியும்.

சல்மான் அலட்சியம்
ஆனாலும், மதுபோதையில் அலட்சியமாகவும், கண்மூடித்தனமாகவும் சல்மான்கான் காரை ஓட்டி இருக்கிறார்.மேலும், தன்னுடைய இந்த நடவடிக்கை தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் ஏற்கனவே அறிந்திருக்கிறார். இது எல்லாவற்றுக்கும் மேலாக அவரது ரத்த மாதிரியில் 0.062 மில்லிகிராம் அளவு ஆல்கஹால் கலந்திருக்கிறது.

குற்றவாளியின் செயல்
சம்பவம் நடந்த பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்யாமலும், சம்பவத்தை காவல்துறைக்கு தெரிவிக்காமலும் இடத்தை விட்டு அகன்றது என்ற சூழல் குற்றவாளிக்கு எதிராக அமைந்தது.

ஓட்டுநர் வாக்குமூலம்
சல்மான் கான் ஓட்டுநர் தனது வாக்குமூலத்தில் தான் காரை ஓட்டியதாக தெரிவித்ததை நீதிபதி ஏற்கவில்லை. "குற்றம்சாட்டப்பட்டவர் (சல்மான் கான்) தான் காரை ஓட்டி வந்தார் என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதனால் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது. அசோக் சிங் என்ற சாட்சி கொண்டு வரப்பட்ட சாட்சி, அவர் குற்றம்சாட்டப்பட்டவருக்கு உதவுவதற்காக சலீம் கானின் அறிவுறுத்தலின் பேரில் ஆஜரானவர்.

டயர் வெடிக்கவில்லை
மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் ஓட்டிய காரின் டயர் வெடித்தது என்ற எதிர்தரப்பு வாதத்தை ஏற்பதற்கில்லை, ஏனெனில் குற்றம்சாட்டப்பட்டவர் கார் நல்ல வேகத்தில் வந்துள்ளது. ஆகையால், சல்மான்கான் மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பில் ஆதாரப்பூர்வமாக சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications