ஓமர் அப்துல்லா டூ மெகபூபா முப்தி மகள் வரை.. ஜம்மு காஷ்மீர் விஐபி வேட்பாளர்களின் வெற்றி - தோல்வி
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் அங்கு போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் யார் யார்? அவர்கள் வென்றார்களா? இல்லையா? என்பதை இங்கு பார்க்கலாம்.
கடந்த 2014 சட்டசபை தேர்தலுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, யூனியன் பிரதேசமான பிறகு முதல் முறையாக 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) தனித்தனியே களமிறங்கின.
கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு 3வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 63.45 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ள நிலையில் வாக்குகள் இன்று எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்? அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஓமர் அப்துல்லா: முன்னாள் முதல்வரான இவர் பாரூக் அப்துல்லாவின் மகன் ஆவார். இவர் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவராக உள்ளார். இவர் கந்தர்பால் மற்றும் புட்காம் என 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் 2 தொகுதிகளிலும் ஓமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
புட்காம் தொகுதியில் ஓமர் அப்துல்லா மொத்தம் 36,010 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிடிபி கட்சியின் ஆகா சையத்தை(பெற்ற வாக்குகள் 17,525) 18,485 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
அதேபோல் கந்தர்பால் தொகுதியில் ஓமர் அப்துல்லா 32,727 ஓட்டுகள் பெற்று வென்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியில் பிடிபி கட்சியின் வேட்பாளர் பஷீர் அகமது மிர் (பெற்ற வாக்குகள் 22,153) என்பவரை 10,574 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தற்போது காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி வென்றுள்ள நிலையில் அடுத்த முதல்வர் வாய்ப்பு ஓமர் அப்துல்லாவுக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
காங்கிரஸ் தலைவர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் தாரிக் ஹமீத் கர்ரா. இவர் சென்ட்ரல் ஷால்டெங் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார். தாரிக் ஹமீத் கர்ரா மொத்தம் 18,933 ஓட்டுகள் பெற்று வாகை சூடினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் முகமது இர்பான் ஷா 4,538 வாக்குகள் மட்டுமே பெற்று 2ம் இடம் பிடித்தார். இதனால் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா 14,395 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ரவீந்தர் ரெய்னா: ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவரான ரவீந்தர் ரெய்னா, நவுசேரா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இவரது பெயரை மையமாக வைத்து தான் டெல்லியில் நரேந்திரா.. ஜம்மு காஷ்மீரில் ரவீந்திரா என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது டெல்லியை மையப்படுத்தி இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி செய்கிறார். அதேபோல் ஜம்மு காஷ்மீரில் ரவீந்தர் ரெய்னாவை முன்னிலைப்படுத்தி ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரசாரம் மேற்கொண்டது.
தற்போது ரவீந்தர் ரெய்னா தோல்வியடைந்துள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பளரான சுரீந்தர் குமார் சவுத்ரி 35,069 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். ரவீந்தர் ரெய்னா மொத்தம் 27,250 ஓட்டுகள் மட்டுமே வாங்கி 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மெகபூபா மகள்: ஸ்ரீகுஃப்வாரா - பிஜ்பெஹாரா தொகுதியில் பிடிபி கட்சியின் தலைவரான மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி போட்டியிட்டார். இவர் தற்போது தோல்வியடைந்துள்ளார். இல்திஜா முப்தி மொத்தம் 23,529 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் இல்திஜா முப்தியை தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளர் பஷீர் அகமது ஷா வீழ்த்தினார். அவர் மொத்தம் 33,299 ஓட்டுகள் பெற்ற நிலையில் இல்திஜா முப்தி 9,770 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 சட்டசபை தொகுதிகளுக்கான ரிசல்ட் முழுவதும் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ‛இந்தியா' கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.‛இந்தியா' கூட்டணியில் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அதிகபட்சமாக 42 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. தேசிய மாநாட்டு கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த கூட்டணி 49 தொகுதிகளில் வென்று கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.
அதேவேளையில் தனித்து போட்டியிட்ட பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று 2வது பெரிய கட்சியாக மாறி உள்ளது. அதேபோல் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட உள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது அவரது கட்சி சந்தித்த மோசமான தோல்வியாகும். மேலுமு் இந்த தேர்தலில் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி ஸ்ரீகுஃப்வாரா - பிஜ்பெஹாரா தொகுதியில் பிடிபி கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.












Click it and Unblock the Notifications