காங். சிஎம் வேட்பாளரை விடுங்க.. மோடி முகத்துக்காகவே ஓட்டுப்போடுவோம்! ராஜஸ்தானில் 37% மக்கள் கருத்து
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் சில சுவாரசிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே ஒரே கட்டமாக வரும் நவ. 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதைத் தொடர்ந்து டிச. 3ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

அங்கே மொத்தம் 200 தொகுதிகள் இருக்கும் நிலையில், பெரும்பான்மையைப் பெற எந்தவொரு கட்சிக்கும் குறைந்தது 101 இடங்கள் தேவை. ராஜஸ்தானைப் பொறுத்தவரை அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ராஜஸ்தான்: இதற்கிடையே ராஜஸ்தான் தேர்தல் தொடர்பாகப் பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் நடத்திய முக்கிய கருத்துக் கணிப்பு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. பொதுவாகச் சட்டசபை தேர்தல் என்பது மாநில அரசைத் தேர்வு செய்யவே நடத்தப்படும் ஒன்றாகும். இதில் மாநில முதல்வர் யார் என்பதிலேயே கேள்வி இருக்கும். ஆனால், வடமாநிலங்களில் பொதுவாக எந்த தேர்தலாக இருந்தாலும் பிரதமர் மோடிக்கு என்று குறிப்பிட்ட வாக்குகள் விழவே செய்யும். இப்போது ராஜஸ்தானிலும் அதுவே தான் நிலைமையாக இருக்கிறது.
ராஜஸ்தானைப் பொறுத்தவரே சுமார் 37 சதவீத வாக்காளர்கள், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை விடப் பிரதமர் நரேந்திர மோடி முக்கியம் என நம்புகிறார்கள், அதே நேரத்தில் கெலாட்டிற்கான ஆதரவும் ரொம்ப குறைவாக எல்லாம் இல்லை. பிரதமரைக் காட்டிலும் கெலாட் முக்கியம் என்று சுமார் 32 சதவீதம் பேர் நம்புகிறார்கள். அதேநேரம் குறைந்தது 20 சதவீதம் பேர் இரு தலைவர்களும் முக்கியம் என்று தெரிவித்தனர்.
பிரதமர் மோடி: சட்டசபைத் தேர்தல் என்றாலும் கூட பிரதமர் மோடிக்கு எந்தளவுக்கு வாக்குகள் கிடைக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கிறது. இரு கட்சிகளும் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், பாஜக நேரடியாகப் பிரதமர் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய இதுவே காரணமாகும்.
அடுத்து காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என்ற கேள்விக்கு அசோக் கெலாட்டிற்கே ஆதரவு அதிகமாக இருக்கிறது. இந்த சர்வே-இல் கெலாட்டிற்கு 39% பேர் ஆதரவளித்துள்ளனர். அதேபோல மற்றொரு இளம் காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் 20% ஆதரவுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மறுபுறம் பாஜகவைப் பொறுத்தவரை வசுந்தரா ராஜேவுக்கு 27% ஆதரவும் பாலக் நாத்திற்கு 13% ஆதரவும் இருக்கிறது.
திருப்தி: அதேபோல ராஜஸ்தானில் கெலாட் அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறதா என்ற கேள்விக்கு 43 சதவீதம் பேர் 'முழு திருப்தியாக இருப்பதாகவும் 28 சதவீதம் பேர் ஓரளவு திருப்தியாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அதேபோல 10 சதவீதம் பேர் ஓரளவு அதிருப்தியில் இருப்பதாகக் கூறியுள்ள நிலையில், 14 சதவீதம் பேர் மட்டுமே முழு அதிருப்தியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய இரண்டும் தான் இப்போது வாக்காளர்களின் இரண்டு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. வேலையின்மை பெரிய பிரச்சினை என்று 21 சதவீதம் பேரும் விலைவாசி உயர்வு தான் பெரிய பிரச்சினை என்று 20 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். அடுத்து வறுமை தான் பிரச்சினை என்று 15% பேரும் வளர்ச்சி இல்லாமல் இருப்பது தான் பிரச்சினை என்று 13 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். அதேநேரம் ஊழல் தான் பிரச்சினை என்று வெறும் 7% பேர் மட்டுமே கூறியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications