இமாச்சல பிரதேசம்: திரும்பிய பக்கமெல்லாம் உள்ளடி வேலை- முதல்வர் வேட்பாளர் இல்லாமல் களத்தில் பாஜக!
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பாஜக கடும் உட்கட்சி மோதலை எதிர்கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அக்கட்சி முடிவு செய்துள்ளதாம்.
68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 18-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இமாச்சல பிரதேச தேர்தல் களத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் இம்முறை டெல்லி, பஞ்சாப் மாநிலங்களின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியும் களமிறங்கியுள்ளது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அதிருப்தி
சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அதிருப்தி இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள படுமுனைப்பு காட்டுகிறது. மிஷன் ரிப்பீட் என்ற பெயரில் அதிகாரத்தைத் தக்க வைக்க போராடுகிறது பாஜக. 68 தொகுதிகளிலும் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக வேட்பாளர் பட்டியல்தான் அக்கட்சியில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தி உள்ளது. பல சிட்டிங் எம்.எல்.ஏக்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்திருக்கிறது பாஜக மேலிடம்.

அதிருப்தி விஸ்வரூபம்
பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு கேபினட் அமைச்சர் உட்பட 11 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்டது. மேலும் 2 அமைச்சர்களின் தொகுதிகள் மாற்றப்பட்டன. 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலிலும் தொகுதி மாற்றங்கள் இருந்தன. இது பாஜகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்டு காங்கிரஸில் இருந்து கட்சி தாவியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அதிருப்தி வேட்பாளர்களாக களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஜெய்ராம் தாக்கூர்
கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது இமாச்சல பிரதேசத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக பிரேம்குமார் தூமலை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். அத்தேர்தலில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பறித்தது பாஜக; ஆனால் முதல்வர் வேட்பாளர் பிரேம்குமார் தூமல் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் ஜெய்ராம் தாக்கூர் முதல்வரானார். தற்போதைய தேர்தலில் ஜெய்ராம் தாக்கூர் மீது பாஜக மேலிடம் நம்பிக்கை கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஜெய்ராம் தாக்கூர் பரிந்துரைத்த பலரது பெயர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லையாம். 1985-ம் ஆண்டு முதல் இமாச்சல பிரதேசத்தில் எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து ஆட்சி அமைத்தது இல்லை என்கிறது தேர்தல் வரலாறு. அத்துடன் ஜெய்ராம் தாக்கூர் மீதான அதிருப்திதான் மிக முக்கிய காரணமாம். இதனால் அவரை மீண்டும் முதல்வராக்க பாஜக மேலிடம் விரும்பவில்லையாம்.

அனுராக் தாக்கூர் ரிட்டர்ன்?
இன்னொரு காரணம், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை பாஜக மேலிடம் முதல்வர் வேட்பாளராக்க விரும்புகிறது என்கிற தகவல்தான். முன்னாள் முதல்வர் பிரேம்குமார் தூமலின் மகன் அனுராக் தாக்கூர் மீண்டும் மாநில அரசியலில் களமிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய பின்னணியில்தான் இம்முறை முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை எதிர்கொள்கிறதாம் பாஜக. இது ஜெய்ராம் தாக்கூர் தரப்பை ரொமப்வே அப்செட் செய்திருப்பதால் தேர்தல் களத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications