கூட்டணி அரசியலில் தனித்து விடப்படுகிறதா திமுக? காங்கிரசின் திரைமறைவு திட்டம்
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் திமுக தள்ளி வைத்துவிட்டு காங்கிரஸ் தலைமையில் தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்க சிறு கட்சிகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியால்தான் திமுகவுக்கு கிடைக்க வேண்டிய ஆட்சிப் பொறுப்பு தட்டிக் போனதாக திமுகவின் பெரிய தலைவர்கள் மறைமுகமாக கருத்து வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த தகவல்களால் காங்கிரஸ் மேலிடம் அப்செட்டாகி உள்ளதாம். லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு மிகக்குறைந்த இடங்களை திமுக ஒதுக்க கூடும் அல்லது எந்த ஒரு இடத்தையும் ஒதுக்காமல் கூட போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று காங்கிரஸ் தலைமை அச்சப்படுகிறது.

தமிழகத்தில் புது கூட்டணி
இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி உருவாக்கும் முயற்சியை ராகுல்காந்தி திரைமறைவில் ஆரம்பித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர்தான் பக்க பலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சிறிய மற்றும் புதிய கட்சிகளின் தலைவர்களை ராகுல் காந்தி டெல்லியில் சந்தித்து வருகிறார்.

ராகுல் காந்தி சந்திப்புகள்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரை மட்டுமின்றி, இயக்குனர் பா. ரஞ்சித்தையும் சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக என்று காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா சம்மதம்
டிடிவி தினகரன் இந்த கருத்து சாதாரண நேரத்தில் வெளி வந்திருந்தால் கூட முக்கியத்துவம் இருந்திருக்காது. பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து விட்டு வெளியே வரும்போது இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறையில் வைத்து, கூட்டணி குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவிடம் தினகரன் விவாதித்து அனுமதி பெற்று இருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள் இதற்காகவே அவர் பெங்களூர் சிறைக்கு சென்று இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்கள். அதிலும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே வந்தால் அதோடு கூட்டணி வைக்க தயார் என தினகரன் கூறியுள்ளது, திமுகவுக்கு, ராகுல் காந்தியின் எச்சரிக்கை குரலாகவோ, அல்லது கூட்டணிக்குள் கலகம் மூட்டும் தினகரன் செயலாகவும் பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் சமாளிப்பாரா
தினகரன் திடீரென இப்படி கூறியுள்ளதை வைத்து பார்த்தால், அவரின் ஆதரவை ராகுல்காந்தி ஏற்கனவே கேட்டிருந்தாரா என்ற கேள்வியும் எழுகிறது. திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் காங்கிரசுக்கு வாக்கு வங்கி உள்ளது. எனவே திமுகவை கழற்றிவிட்டு பிற கட்சிகளுடன் இணைந்து அதிமுகவை எதிர்க்கலாம் என்று காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த இக்கட்டிலிருந்து திமுக எப்படி மீண்டு வரும் அதற்கு ஸ்டாலின் என்ன மாதிரியான எதிர்வினையாற்ற போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications