சில காலம் பிச்சை எடுத்து சாப்பிட்டேன், இப்போதும் அவ்வாறு செய்ய விரும்புகிறேன்: மோடி
டெல்லி: நான் பிரதமர் ஆனால் எனக்கு பதவியை அளிக்கும் அத்வானிக்கு எப்படி எதையாவது கொடுப்பது என்று பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு,
கேள்வி: நாட்டின் முக்கிய தலைவர்களான சோனியா, சிதம்பரம், சரத் ஆகியோர் எங்கு சென்றாலும் மோடியின் பெயர் கேட்பதை நினைத்து வருந்துகிறார்களே?
பதில்: அவ்வளவு பெரிய மக்கள் சிறு விஷயங்கள் பற்றி கவலைப்படுகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.
கேள்வி: அவரை போன்ற ஒரு தேசபக்தி உள்ளவர் இல்லை என்பது போன்று நடிக்கிறார். அவ்வாறு நடித்து அவர் பிரதமர் பதவியை பெற நினைக்கிறார் என்கிறார்களே?
பதில்: ஒவ்வொரு குடிமகனும் தேசபக்தி உள்ளவன் தான். நான் யாருடைய தேசபக்தியையும் சந்தேகிக்கவில்லை, நான் தான் அதிக தேசபக்தி உள்ளவன் என்றும் கூறிக் கொள்ளவும் இல்லை.
கேள்வி: டிவி, ரேடியோ மற்றும் செய்தித்தாள்களில் மோடி சர்கார் பற்றி மட்டுமே விளம்பரம் செய்யப்படுகிறது. இந்த அலையை உருவாக்கியதே மோடி தான் என்று நிதிஷ் குற்றம்சாட்டியுள்ளாரே?
பதில்: நீங்களாகத் தான் என் பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். யாராவது உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்களா? (பார்வையாளர்கள்) இல்லை. தேசம் அதுவாகத் தான் கூறுகிறது என்று நினைக்கிறீர்களா? (பார்வையாளர்கள்) ஆமாம். நானோ, நிதிஷோ சொல்வதை கேட்க வேண்டாம். மக்கள் சொல்வதை கேளுங்கள்.
கேள்வி: மோடி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு ரூ.1000 கோடி பணம் கொடுத்து தன்னைப் பற்றிய விளம்பர ஸ்லோகன்களை எழுத வைத்துள்ளார் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளாரே?
பதில்: நான் அப்படி எதுவும் செய்யவில்லை. இந்த பொய் சில காலமாக வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
கேள்வி: சொட்டை தலை உள்ளவர்களிடம் கூட நீங்கள் சீப்பை விற்றுவிடுவீர்கள் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளாரே?
பதில்: நான் டீ விற்றுள்ளேன். சீப்பு விற்றது இல்லை. அப்படி என்னால் விற்க முடியும் என்று அவர்கள் நினைத்தால் அதுவே எனக்கு சாதனை தான்.
கேள்வி: பஞ்சாப், அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம் சென்ற நீங்கள் அவர்களைப் போன்று தொப்பி அணிந்தீர்கள். ஆனால் இமாம் அளித்த குல்லாவை அணிய மறுத்துவிட்டீர்கள் என்று உமர் அப்துல்லா கூறியிருக்கிறாரே?
பதில்: காந்தி, பட்டேல், நேரு ஆகியோர் குல்லா அணிந்து நான் பார்த்தது இல்லை. மக்களை திருப்திபடுத்த அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். நான் அனைத்து மதங்களின் பாரம்பரியத்தையும் மதிப்பவன்.
கேள்வி: பெரிய நாய் மோடியின் பச்சாதாபம் எங்களுக்கு தேவை இல்லை என்று ஆசம் கான் தெரிவித்துள்ளது பற்றி?
பதில்: நான் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாய் நன்றி உடையது. என்னில் அந்த குணத்தை சிலர் பார்த்திருப்பது எனக்கு பெருமை தான்.
கேள்வி: நீங்கள் பிரதமர் ஆனால் நாட்டுக்கு கேடு என்று மன்மோகன் சிங் கூறியுள்ளது பற்றி?
பதில்: அவர் அப்படி கூறியிருக்கக் கூடாது என அவரது கட்சியினரே தெரிவித்துள்ளனர். அதனால் தற்போது அவர் அவ்வாறு கூறுவதை நிறுத்திக் கொண்டார்.
கேள்வி: நீங்கள் எல்லாம் ஒரு அணியாக செயல்பட்டால் அத்வானி ஏன் 3 முறை கோபப்பட்டார்?
பதில்: அவர் கோபப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
கேள்வி: முரளி மனோகர் ஜோஷி வாரனாசியில் போட்டியிட விரும்பினார். ஆனால் நீங்கள் அங்கு போட்டியிடுகிறீர்கள்?
பதில்: எனக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் கான்பூரில் இருந்து போட்டியிடுகிறார். அவர் அங்கு வெற்றி பெறுவார் என்றே நம்புகிறேன்.
கேள்வி: அண்மையில் தான் நீங்கள் டீ விற்றதே தெரிய வந்தது. உங்களின் சொந்த வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்துள்ளீர்களே?
பதில்: நான் என் சொந்த வாழ்க்கை பற்றி அதிகம் பேசுவது இல்லை. இது குஜராத் மக்களுக்கு தெரியும்.
கேள்வி: நீங்கள் இளம்வயதில் வீட்டை விட்டு வெளியேறி இமய மலை வரை சென்றுள்ளீர்களே?
பதில்: நான் பல முறை வீட்டை விட்டு வெளியேறியுள்ளேன். ஆன்மீக வாழ்க்கை வாழ விரும்பினேன். சில காலம் பிச்சை எடுத்து சாப்பிட்டுள்ளேன். தற்போதும் அதை செய்ய விரும்புகிறேன்.
கேள்வி: நீங்கள் பிரதமர் ஆனால் அத்வானியை அடுத்த ஜனாதிபதி ஆக்குவீர்களா?
பதில்: மோடி பிரதமர் ஆனால் அது அத்வானியால் தான். எனக்கு பதவி அளிப்பவர்களுக்கு நான் எப்படி எதையாவது கொடுப்பது?
கேள்வி: குஜராத் கலவரத்திற்கு பிறகு சர்வதேச ஊடகங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் உங்கள் மீது பழி சுமத்தினார்கள். நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?
பதில்: நீங்கள் உண்மையை நம்புவதாக இருந்தால் இந்த குற்றச்சாட்டுகளை சந்திக்கும் சக்தி கிடைக்கும். இப்பொழுது கூட பல தரப்பட்ட குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்படுகின்றன. நான் மட்டும் திடமானவனாக இல்லை என்றால் மக்களின் உள்ளங்களை வெல்ல முடியாது.
கேள்வி: மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்களே?
பதில்: நான் காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்போது பூமித்தாயிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தான் காலை தரையில் வைப்பேன்.
கேள்வி: பலாத்காரம் ஒரு சிறிய குற்றம், அதற்கு மரண தண்டனை தேவை இல்லை என்று கூறியுள்ளார் முலாயம் சிங் யாதவ். நான் பிரதமர் ஆனால் அந்த சட்டத்தை மாற்றுவேன் என்று கூறியுள்ளாரே?
பதில்: மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் கூட இது போன்ற சிறு விஷயங்கள் நடக்கத் தான் செய்யும் என்றார். அவர்களின் எண்ணம் நாட்டுக்கு நல்லது அல்ல. அது போன்ற குற்றங்கள் நடக்கும்போது நாம் வலியை உணர்வது இல்லையா? சமூகத்தில் மாற்றம் ஏற்பட காலம் ஆகும். நீங்கள் தான் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் என்று நினைத்துக் கொண்டால் அல்லது உங்கள் மகள் என்று வைத்துக் கொண்டால் அது சிறிய விஷயம் என்று தோன்றுமா? இந்தியாவின் அனைத்து மகள்களும் நம் மகள்கள் என்றார்.












Click it and Unblock the Notifications