காவிரி விவகாரத்தில் திடீர் நம்பிக்கை.. தமிழகத்திற்கு சாதகமாக அமையுமா மத்திய அரசின் புது வாதம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம்-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று மதியம் விசாரிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு விசாரணையை கையிலெடுக்கவும் சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வாதிட்டார்.

Will the union government try to set up Cauvery management board

இதற்காக பல்வேறு அரசியல் சாசன சட்ட பிரிவுகளை அவர் உதாரணத்திற்கு காண்பித்தார். கர்நாடக தரப்பில் பாலி.எஸ்.நாரிமன் இதையடுத்து வாதம் முன்வைத்தார். மேல்முறையீடு மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரிக்க முடியும், அதிகாரம் உள்ளது என சில சட்டப்பிரிவுகளை உதாரணம் காண்பித்து, நாரிமன் வாதிட்டார். தமிழகம் தரப்பில் வாதிட்ட சேகர் நாப்தே, தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டபோது மகிழ்ந்திருந்த கர்நாடகாவுக்கு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்கவும் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுமதியில்லை என வாதிட்டது எரிச்சலை தந்தது. கர்நாடக அரசியல்வாதிகள் முகம் தொங்கி போய்விட்டது.

காவிரி பங்கீடு குறித்து விசாரித்த நடுவர் மன்றம், 2007ம் ஆண்டு, பிப்ரவரி 5ம் தேதி, தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. இதன்படி, காவிரியில் ஓடும் மொத்த நீர் 740 டிஎம்சி (ஆண்டுக்கு) என அளவிடப்பட்டுள்ளது. இதில், கேரளாவுக்கு 30 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி, சுற்றுப்புறச் சூழலுக்கு 10 டிஎம்சி, கடலில் சேரும் நீர் 4 டிஎம்சி என பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கர்நாடகம் 192 டிஎம்சி நீரை மட்டுமே தமிழகத்திற்கு தர வலியுறுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து 7 டிஎம்சி நீரை புதுவைக்கு கொடுக்க வேண்டும். மீதம் உள்ள நீரை காவிரியின் கிளை நதிகளான அமராவதி, பவானி, நொய்யல், பாலாறு ஆகியவற்றில் இருந்தும், மழை நீர் வந்து சேரும் ஓடைகள், பள்ளங்கள் மூலமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்நாடகாவுக்கான 270 டிஎம்சி நீரில் 192.5 டிஎம்சி நீரை மட்டும் அவர்கள் காவிரியில் இருந்து எடுக்க வேண்டும். மீதம் உள்ளதை அவர்களது மாநிலத்தின் இதர ஆதாரங்களில் இருந்து எடுக்க வேண்டும். இந்த நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராகத்தான் கர்நாடகாவும், தமிழகத்தை போலவே அப்பீல் செய்து சுப்ரீம் கோர்ட் படிகளில் கால் வைத்துள்ளது.

தங்களுக்கு கூடுதல் தண்ணீர் ஒதுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, பெங்களூர் நகருக்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருப்பதாகவும், இப்போதுள்ள மக்கள் தொகை அடிப்படையில், அந்த பங்கை அதிகரிக்க வேண்டும் என்பதும் கர்நாடக தரப்பு வாதம்.

மேல்முறையீட்டை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு உரிமையில்லை என்று மத்திய அரசு வாதிடுவதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டால், அய்யய்யோ.. அவ்வளவுதான். நடுவர்மன்ற தீர்ப்புப்படி கர்நாடகா தண்ணீர் தர வேண்டிவரும்... பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கு வெளியே பேசித்தான் தீர்க்க வேண்டிவரும்... பேச்சுவார்த்தை எந்த முடிவுக்கும் வராது... இவையெல்லாம்தான் கர்நாடகா பதற காரணம்.

இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான மனுக்களை, சுப்ரீம் கோர்ட் விசாரிக்க கூடாது, நடுவர்மன்ற தீர்ப்பே இறுதியானது என்கிறது மத்திய அரசு. நடுவர்மன்ற தீர்ப்பில்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஷரத்து சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால், இதையும் மத்திய அரசே ஏற்றேயாக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடாது என கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் வாதிட முடியாது அல்லவா!

இந்த விஷயத்தில் மத்திய அரசு முழுக்க முழுக்க சட்டப்படியே, செல்ல விரும்புவதாகவே அதன் நடவடிக்கைகள் தெரிகின்றன. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகளையெல்லாம், வாலின்டயராக சென்று, தன்பக்கம் இழுத்துவிட்டுக்கொள்கிறது மத்திய அரசு. சில நேரங்களில் அதன் முடிவு தமிழகத்திற்கு பாதகமாகவும், சில நேரங்களில் சாதகமாகவும் மாறி, மாறி பரிணமிக்கிறது.

காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பு என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு இணையானது என்று மத்திய அரசு இன்று வாதிட்டுள்ளது. ஆனால், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்துகொள்ள வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. பேச்சுவார்த்தை மூலம், அந்தந்த காலகட்டத்திற்கு தேவையான ஷரத்துகளை செயல்படுத்த நடுவர்மன்ற தீர்ப்பு வழி வகை செய்கிறது. நதிநீர் பங்கீடு விவகாரம், கூட்டாட்சி தத்துவத்திற்கு உட்பட்டு, பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் காவிரி நடுவர் மன்றத்தின் விருப்பம், என்பதேயே இந்த ஷரத்து எடுத்துக்காட்டுகிறது.

எனவே, இனிமேல், அரசியல் காய் நகர்த்தல்கள் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உதவும். நீதிமன்றத்திற்கு வெளியே இப்பிரச்சினையை வலுக்கட்டாயமாக இழந்து வந்துள்ளது மத்திய அரசு. மேலாண்மை வாரியத்தை அமைத்து அதற்கு சுபம் எழுதும் பொறுப்பும் மத்திய அரசுக்குதான் உள்ளது. அல்லது, "வேலியில் போன ஓணானை.. " கதையாகத்தான் இரு மாநிலங்களிலும், கையை சுட்டுக்கொள்ளும் மத்திய அரசு.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Will the union government try to set up Cauvery management board as, it says setting up management board is comes under their purview.
Please Wait while comments are loading...