முதல்வரே சொன்னாலும் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் குணால் கம்ரா
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்திருந்தாலும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்து பாடியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் குறித்த என் விமர்சனங்களில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன் என குணால் கம்ரா கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் கை கோர்த்த துணை முதல்வர்களான சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோரை கேலியும் கிண்டலுமாக விமர்சித்தார் குணால் கம்ரா. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.

நடிகர் குணால் கம்ராவுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் வன்முறையில் இறங்கினர். குணால் கம்ராவின் நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டுடியோவை சிவசேனா தொண்டர்கள் சூறையாடினர். மகாராஷ்டிரா சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. குணால் கம்ரா மீது போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்ததற்காக, குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் குணால் கம்ரா வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், முதல்வர் பட்னாவிஸ் கேட்டுக் கொண்டாலும் கூட ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்து பாடியதற்காக மன்னிப்பு கேட்கவே முடியாது; எந்த வன்முறை கும்பலுக்கும் பயப்படமாட்டேன். நீங்கள் இடிக்க விரும்புகிற இடத்தை சொல்லுங்கள்.. அங்கே மீண்டும் நிகழ்ச்சி நடத்தி காட்டுகிறேன். எனக்கு எதிராக வன்முறைதான் சரி என களமிறங்கியவர்கள் மீது சட்டம் பாயுமா? என் ஸ்டுடியோவை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? எனவும் குணால் கம்ரா ஆவேசப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications