எரிபொருள் உற்பத்தியில் புதிய முயற்சி! இனி உத்தரப் பிரதேசம்தான் டாப்.. யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: எரிபொருள் உற்பத்தியில் இனி உத்தரப் பிரதேசம்தான் டாப்பில் இருக்கப்போகிறது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் வேளாண் துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "உத்தரப் பிரதேசம் தற்போது 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக வளர்ந்துக்கொண்டிருக்கிறது. இது வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல. இந்த அரசு வேளாண் உற்பத்தி வளர்ச்சியையும் கருத்தில் கொண்டிருக்கிறது. தற்போது உத்தரப் பிரதேசத்தில்தான் கரும்பு உற்பத்தியில் அதிக அளவில் இருக்கிறது.

ஒட்டுமொத்த நாட்டிற்கே கரும்பு விவசாயத்தில் உத்தரப் பிரதேசம்தான் முன்னோடி. உலகம் முழுவதும் படிம எரிபொருளுக்கு மாற்றான ஆற்றலை மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பல்வேறு நாடுகள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரித்து வருகின்றன. நாமும் விரைவில் பெட்ரோல் டீசலிலிருந்து விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்களின் வருகைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. பெட்ரோல் டீசல் புதைபடிம எரிபொருளாகும். அதாவது இது பூமிக்கடியில் இருந்து எடுக்கப்படுகிறது.
எனவே இதனை எரிக்கும்போது அதிக அளவு மாசு ஏற்படுகிறது. இந்த மாசு மனிதர்களுக்கு நுரையீரல் தொடர்பான அதிக நோய்களை ஏற்படுத்துகிறது. மட்டுமல்லாது பூமியின் வெப்பத்தையும் அதிகரிக்கிறது. எனவே இதற்கு மாற்றாக எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த யோசனை இருக்கிறது. இதற்கேற்றார் போல வாகனங்களின் என்ஜின்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதுதான் இனி எதிர்காலமாக இருக்கப்போகிறது. அப்படியானால் உத்தரப் பிரதேசம்தான் அதிக அளவில் எத்தனாலை உற்பத்தி செய்யும்.
ஏனெனில் கரும்பு விவசாயிகள் இங்குதான் அதிகம். அந்த வகையில் விரைவில் மாநிலம் முதல் இடத்திற்கு வந்துவிடும். இத்துடன் வெவ்வேறு பயிர்களின் அறுவடையையும் அரசு ஊக்குவிக்கும். இதனால் மண்ணின் சமநிலை பாதுகாக்கப்படும். விவசாயிகளுக்கான மானியங்கள், மின்சாரம், நீர் உள்ளிட்டவை சரியாக கிடைக்கிறதா? என்பதையும் அரசு உறுதி செய்யும். தேவையெனில் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications