உத்தர பிரதேசத்தில் எடுபடாத யோகி மேஜிக்.. மீரட் நகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு பலத்த அடி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் மாநகராட்சிகளில் ஆளும் பாஜக மொத்தமாக வென்ற நிலையில் ஊரக மற்றும் சிறு நகரங்களில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மீரட், காசியாபாத் மற்றும் ஷஹரான்பூர் ஆகிய டிவிஷன்களில் யோகியின் அலை எடுபடவில்லை.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். 6 ஆண்டுகளாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி வகித்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் கடந்த 4 மற்றும் 11 ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.

மாநிலத்தில் உள்ள 17 மாநகராட்சிகளின் மேயர் மற்றும் கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டது. மேயர் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றி பெற்றது. அதாவது, அயோத்தி, ஜான்சி, பரேலி, மதுரா விருந்தாவன், பிரயாக்ராஜ், அலிகார் உள்பட மொத்தமுள்ள 17 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளையும் பாரதிய ஜனதா கைப்பற்றியது.
அனைத்து மாநகராட்சிகளிலும் பெரும்பாலான வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதுபோல 198 நகர் பாலிகா பரிஷத் தலைவர் மற்றும் 5,260 உறுப்பினர்கள், 542 நகர பஞ்சாயத்து தலைவர்கள், 7,104 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடைபெற்றது. இதிலும் பாஜக பெரும்பாலான இடங்களில் வென்று இருந்தது.
எனினும் , மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் பாஜகவின் சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக மீரட், காசியாபாத் மற்றும் ஷஹரான்பூர் ஆகிய டிவிஷன்களில் பாஜக யோகியின் அலை எடுபடவில்லை. மாநகராட்சிகளில் மொத்தமாக வெற்றி பெற்றாலும் நகர் பாலிகா மற்றும் நகர் பஞ்சாயத்து மட்டத்தில் பாஜகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

யோகி ஆதித்யநாத்தின் அலை கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் எடுபடாமல் சென்றுள்ளது பாஜகவிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மீரட் சஹரான்பூர் டிவிஷனில் மேயர் தேர்தலை தவிர்த்து பாஜகவின் மேஜிக் எங்கும் எடுபடவில்லை. நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் பொறுப்பில் மொத்தம் உள்ள 90 இடங்களில் 64 இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.
பாஜக வேட்பாளர்கள் வெறும் 26 இடங்களில் மட்டுமே வென்றுள்ளனர். பக்பத், முசார்பர்நகர் மற்றும் காசியாபாத் ஆகிய நகரங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கிறர்கள். அதிலும் இந்த மாவட்டங்களில் பாஜகவிற்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது. யோகி ஆட்சி நிர்வாகம் மற்றூம் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டும் அதை வாக்குகளாக பாஜகவால் மாற்ற முடியவில்லை.












Click it and Unblock the Notifications