காக்கிநாடா: ஒய்எஸ்ஆர் கட்சி கவுன்சிலர் கார் ஏற்றி படுகொலை - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
காக்கிநாடாவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போடு வெளியாகியுள்ளது.
காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் கார் ஏற்றி கவுன்சிலரை கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர் ரமேஷ் கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கவுன்சிலர் ரமேஷ் நேற்று இரவு சூர்யா கார் வாஷ் நிறுவனத்தின் அருகே விபத்தில் அடிபட்டு சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சிலர் ரமேஷை கீழே தள்ளி விட்டு மூன்று முறை காரை ஏற்றி கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சின்னா என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் விசயமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. வியாழக்கிழமை மாலையில் சின்னாவிற்கும் ரமேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரமேஷை கீழே தள்ளி காரை ஏற்றி கொலை செய்துள்ளது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. கீழே விழுந்த ரமேஷ் மீது கொலையாளிகள் மூன்று முறை காரை ஏற்றி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்பவர்களின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications