1200 ஆண்டுகள் பழமையான கோயில்! இடையே புகுந்து ஆக்கிரமித்த கிறிஸ்துவ குடும்பம்.. பாக். கோர்ட் அதிரடி
லாகூர்: பாகிஸ்தானில் இருக்கும் இந்து கோயில் தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், அந்த 1200 ஆண்டு பழமையான கோயில் புத்துயிர் பெற்று உள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களின் உரிமை அங்கு நசுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. அங்கு வாழும் இந்து மக்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது
இந்தச் சூழலில் பாகிஸ்தானில் இருக்கும் இந்து கோயில் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான்
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருக்கும் 1,200 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில் நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. லாகூர் அனார்கலி பஜார் அருகே உள்ள இந்த வால்மீகி கோயிலை நீண்ட காலமாக ஆக்கிரமித்து இருந்து ஒரு கிறிஸ்தவ குடும்பத்திடம் இருந்து எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியம் கடந்த மாதம் மீட்டெடுத்தது. லாகூர் கிருஷ்ணர் கோயிலும் வால்மீகி கோயிலும் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவக் குடும்பம்
இந்துவாக மாறிவிட்டதாகக் கூறும் கிறிஸ்தவக் குடும்பம் ஒன்று, கடந்த 20 ஆண்டுகளாக அந்த கோயிலைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. வால்மீகி சாதி இந்துக்கள் மட்டுமே கோயிலில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அந்த குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில் மீட்கப்பட்டு உள்ளது. புதிதாகத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு கோயில் புதுப்பிக்கப்படும் என எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியம் தெரிவித்து உள்ளது.

நீண்ட போராட்டம்
இது தொடர்பாக அந்த வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "கிறிஸ்துவ குடும்பத்திடம் இருந்து கோயிலை மீட்டுள்ளோம். பல ஆண்டுகளுக்குப் பின்னர் கோயிலில் அனைத்து இந்துக்களும் நுழைந்து பூஜை செய்தோம். அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. 1200 ஆண்டுகள் பழமையான அந்த கோயிலை தங்கள் சொத்து என அந்த கிறிஸ்துவ குடும்பத்தினர் கூறி வந்தனர், நீண்ட போராட்டத்திற்குப் பின், அது இப்போது மீட்கப்பட்டு உள்ளது" என்றார்

எப்படி
1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, பாகிஸ்தானிலும் வன்முறை ஏற்பட்டது. அப்போது கும்பல் ஒன்று வால்மீகி கோயிலுக்குள் நுழைந்து கிருஷ்ணர் மற்றும் வால்மீகி சிலைகளை உடைத்து நொறுக்கியது. கோயிலை இடிக்க முயன்று, கோயிலுக்குத் தீயும் வைத்தனர். அந்த சமயத்தில் ஏற்பட்ட குழப்பங்களின் விளைவாகவே இந்த கோயில் அந்த குறிப்பிட்ட குடும்பத்தின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளது.

வாரியம்
இப்போது சுமார் 20 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர், எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியம் இந்த கோயிலை மீட்டு உள்ளது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், பாகிஸ்தான் பகுதியில் வாழ்ந்து வந்த லட்சக் கணக்கான இந்துக்கள், தங்கள் நிலங்களை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வந்தனர். அப்படி விட்டுவிட்டு வந்த கோயில்களையும் நிலங்களையும் இந்த எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியம் தான் பராமரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications