காசாவில் 48 மணிநேரத்தில் பலியாகப்போகும் 14,000 குழந்தைகள்.. இஸ்ரேலால் புதிய பிரச்சனை.. ஐநா வார்னிங்
காசா: காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்றைய தினம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 38 பேர் பலியாகினர். இந்நிலையில் தான் மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு வழங்கப்படும் நிவாரண பொருட்கள் இன்னும் 48 மணிநேரத்தில் சென்றடையாவிட்டால் அங்கு 14 ஆயிரம் குழந்தைகள் இறப்பார்கள் என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அண்டை நாடுகளாக உள்ளன. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக காசா உள்ளது. இந்த காசாவில் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் போராக மாறி உள்ளது.

கடந்த 2023 அக்டோபர் 7 ம் தேதி போர் என்பது தொடங்கி இன்று வரை தொடர்ந்து வருகிறது. காசா மீது இஸ்ரேல் தரைவழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வரை 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல லட்சம் மக்கள் காசாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளிடம் தஞ்சமடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் கூட காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் மொத்தம் 38 பேர் வரை பலியாகினர். தொடர்ந்து தாக்குதலை நடந்து வருவதால் காசா - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதோடு காசா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் காசாவுக்கு உடனடியாக உதவிகள் சென்றடையாவிட்டால் அடுத்த 48 மணிநேரத்தில் 14 ஆயிரம் குழந்தைகள் இறப்பை சந்திக்க நேரிடும் என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐநாவின் மனிதாபிமான உதவிகள் வழங்கும் பிரிவின் தலைவர் டாம் பிளட்சர் கூறியதாவது: இஸ்ரேல் வடக்கு காசாவில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைப்பதாக கூறுகிறார். காசாவுக்கு உதவி பொருட்கள் வழங்க இஸ்ரேல் விதித்த தடை நேற்று விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. காசா மக்களுக்கு உதவி கிடைப்பதற்கான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் தளர்த்தி உள்ளது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை. இருப்பினும் 5 லாரிகள் மட்டுமே காசாவிற்குள் நுழைந்துள்ளன. அந்த லாரிகளில் இருந்தும் பொருட்கள் பொதுமக்களை சென்றடையவில்லை. காசாவுக்கு அடுத்த 48 மணிநேரத்தில் கூடுதல் உதவிகள் சென்றடைய வேண்டும். இல்லாவிட்டால் 14 ஆயிரம் குழந்தைகள் இறக்க நேரிடலாம்'' என்று கவலை தெரிவித்துள்ளார்.
முன்னதாக காசாவுக்கு தினமும் 500 லாரிகளின் மனிதாபிமான அடிப்படையில் பொருட்கள் காசாவுக்குள் சென்றன. ஆனால் இப்போது லாரிகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்தள்ளது. இதனால் காசா மக்கள் உதவிகள் இன்றி தவித்து வருகின்றனர். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பசி, பட்டினியால் வாடுகின்றன. சிகிச்சைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன. இதுபற்றி காசாவில் வசிக்கும் மக்கள் கூறுகையில், ‛‛எங்கள் குழந்தைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு துண்டு ரொட்டி கூட கிடைக்கவில்லை. அரிசி, மாவு, காய்கறிகள் என்று எந்த உணவு பொருட்களும் எங்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது'' என்றார்.
இதனால் இஸ்ரேல் காசாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனுப்பப்படும் நிவாரண பொருட்களை கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்க வேண்டும் என்று ஐநா மட்டுமின்றி சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications