நடுக்கடலிலேயே 'யூடர்ன்' போட்ட ஃபிளைட்.. அந்த 16 மணி நேரம்.. திருதிருவென விழித்த பயணிகள்.. என்னவாம்?
போயிங் 787 விமானம் நீண்ட தூர பயணத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகும். அதேபோல ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 18 ஆயிரம் கி.மீ வரை இதனால் பறக்க முடியும்.
வெலிங்டன்: நியூசிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற விமானம் ஒன்று பாதியிலேயே திருப்பி விடப்பட்ட நிலையில் 16 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கியிருப்பது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக நீளமான விமான பயணங்களில் நியூசிலாந்து டூ நியூயார்க்கும் ஒன்று. சுமார் 15 ஆயிரம் கி.மீ இடைவெளி கொண்ட இந்த பயணம் 18-21 மணி நேரம் வரை கொண்டதாகும். இடையில் ஓய்வெடுக்க எந்த விமான நிலையமும் இருக்காது. வழி முழுவதும் நீல நிறமான பசிபிக் கடல் மட்டும்தான் இருக்கும். இப்படி இருக்கையில், 'ஏர் நியூசிலாந்து' நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 விமானம் ஒன்று பயணிகளுடன் நேற்று நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க்குக்கு புறப்பட்டது.
இந்த வகை விமானங்கள் நீண்ட தூர பயணத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகும். அதேபோல ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 18 ஆயிரம் கி.மீ வரை இதனால் பறக்க முடியும் என்பதால் நியூசிலாந்திருந்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த வகை விமானங்கள் இயக்கப்படுகின்றன. இப்படி இருக்கையில் நியூாயர்க்கின் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் திடீரென மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின் விநியோக வயர்களில் ஏற்பட்ட சிறிய தீ விபத்து காரணமாக மின் விநியோகத்தை உடனடியாக சீர்படுத்த முடியவில்லை.

மின்தடை
இதனால் இரவில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு ஒரு விமான நிலையத்திற்கு மாற்றிவிடப்பட்டுள்ளன. ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் அருகில் இருந்த விமான நிலையங்களிலும் இந்த விமானங்களை தரையிறக்க முடியவில்லை. ஏனெனில் அந்த விமான நிலையத்திற்கு என போடப்பட்டிருந்த லிஸ்ட்டில் இருந்த விமானங்களே அதிகம் என்பதால் புதிய விமானங்களின் வருகையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் இந்த பக்கம் நியூசிலாந்திலிருந்து புறப்பட்டு வந்த விமானம் ஹவாய் தீவு அருகே வந்து சேர்ந்திருக்கிறது. அப்போதுதான் ஜான் எஃப் கென்னடி விமான நிலைய அதிகாரிகளுக்கு நியூசிலாந்து விமானம் குறித்து நினைவுக்கு வந்திருக்கிறது.

யு டர்ன்
எனவே உடனடியாக விமானத்தை வேறு ஒரு விமான நிலையத்தில் தரையிறக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். நடுவில் சுமார் 14,900 கி.மீ வரை வெறும் பசிபிக் கடல் மட்டுமே இருப்பதால் எங்கு தரையிறக்குவது என்று தெரியாமல் விமானிகள் குழம்பியுள்ளனர். ஒரு கட்டத்தில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என போயிங் 787-ஐ விமானிகள் மீண்டும் தங்கள் ஊருக்கே திருப்பியுள்ளனர். இதுவரை கடந்து வந்தது 8 மணி நேரம் ஆகியுள்ள நிலையில் எரிபொருளை செக் செய்து நடுக்கடலிலேயே யு டர்ன் அடித்துள்ளனர். கடைசியாக 16 மணி நேரத்திற்கு பின்னர் பயணிகள் கண் விழித்து பார்க்கையில் முதலில் எதுவும் தெரியவில்லை.

மீண்டும் அதே இடம்
பின்னர் விமானத்திலிருந்து கீழே இறங்கிய பின்னர்தான் அடடே இந்த விமான நிலையம், மலை, கட்டிடங்கள் இதெல்லாம் நியூசிலாந்தின் ஆக்லாந்து விமான நிலையம் மாதிரியே இருக்கிறதே என்று யோசித்துள்ளனர். பின்னர் சற்று குனிந்து பார்த்த பின்னர்தான் ஆக்லாந்து தங்களை அன்புடன் வரவேற்கிறது என்கிற போர்ட்டு இருந்திருக்கிறது. குழம்பிப்போன பயணிகள் என்ன நடந்தது என்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர். பின்னர்தான் விமான நிலைய நிர்வாகம் நடந்த சம்பவம் குறித்து விரிவாக கூறியிருக்கிறது. இருப்பினும் பயணிகள் பலர் இந்த சம்பவத்தால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

மீண்டும் பயணம்
இவ்வளவு தூரம் சென்ற விமானம் ஏன் அமெரிக்காவின் வேறு ஒரு விமான நிலையத்தில் தரையிறங்கவில்லை? என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர். 16 மணிநேரம் பயணம் என்பது முழுவதும் வீணாகிவிட்டதே என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து ஏர் நியூசிலாந்து இதே பயணிகளுக்கு மீண்டும் ஒரு பயணத்தை ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளது. மேலும், ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தை தவிர வேறு ஒரு விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டால் தேவையற்ற வணிக சிக்கல் ஏற்பட்டிருக்கும். எனவேதான் உங்களை பத்திரமாக திருப்பி கொண்டு வந்துவிட்டோம் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications