அமெரிக்காவில் கொடூரம்: டீன் ஏஜ் பார்ட்டி நடந்த நைட் கிளப்பில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் பலி
போர்ட் மேயர்ஸ்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள இரவு நேர கிளப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர், 17 பேர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புளோரிடா மாநிலத்தில் இருக்கும் போர்ட் மயர்ஸ் நகரில் கிளப் ப்ளூ என்ற இரவு நேர கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு பதின்வயதினருக்கான பார்ட்டி நடந்தது.

இந்நிலையில் அந்த கிளப்புக்குள் இன்று அதிகாலை புகுந்த 2 பேர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிளால் கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 2 பேர் பலியாகினர், 17 பேர் காயம் அடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது பலர் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த மாதம் தான் புளோரிடாவின் ஆர்லாண்டோ நகரில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு நேர கிளப்புக்குள் புகுந்த ஒருவர் 49 பேரை சுட்டுக் கொன்றார். அந்த சோகத்தில் இருந்து புளோரிடா மக்கள் மீண்டு வரும் முன்பு தற்போது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications