இஸ்லாமிய நாடுகளை விடுங்க.. இஸ்ரேலை சுத்துப்போட்ட 22 நாடுகள்.. நெதன்யாகுவிற்கு பெரும் சிக்கல்
காசா: காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இதற்கு இஸ்லாமிய நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது புதிதாக 22 நாடுகள் ஒன்றாக திரண்டுள்ளன. இந்த 22 நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுப்பதால் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
அண்டை நாடுகளாக இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உள்ளன. பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இந்த போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது.

காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் போர் முடியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொடக்கம் முதலே இஸ்ரேல் போரை கைவிட வேண்டும் என்று இஸ்லாமிய நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் கேட்பதாக இல்லை. தொடர்ந்து காசாவில் போர் புரிந்து வருகிறது.
இந்நிலையில் தான் இஸ்லாமிய நாடுகளை தவிர்த்து தற்போது இஸ்ரேலுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் உள்பட 22 நாடுகள் குரல் கொடுக்க தொடங்கி உள்ளன. அதாவது காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுப்பதற்கு 22 நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதன்படி ஆஸ்திரேலியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், லாத்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, நியூசிலாந்து நார்வே, போர்ச்சுக்கல், ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை தடுப்பதை ஏற்க முடியாது.
இந்த நடவடிக்கையால் காசாவில் உள்ள மக்கள் பசியால் வாட கூடும். பல மக்களுக்கு மருத்து உதவிகள் தேவையாக உள்ளது. உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காவிட்டால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடும். தற்போது இஸ்ரேல் மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதி கொடுத்து இருப்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால் இந்த உதவிகள் முறையாக காசா மக்களை சென்றடைய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன.
முன்னதாக பிரிட்டன், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டன. அதில், காசாவில் இனி புதிய ஆபரேஷன்களை இஸ்ரேல் தொடங்க கூடாது. காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. இதன்மூலம் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக 22 நாடுகள் ஒன்றாக குரல் கொடுத்துள்ளன. இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications