உசுரே நீ தானே.. கணவருக்காக 80 ஆண்டு காத்திருந்த 103 வயது பாட்டிக்கு நேர்ந்த சோகம்! ஹைலைட்டான கடிதம்
பெய்ஜிங்: சீனாவில் ராணுவத்தில் பணியாற்ற சென்ற கணவர் மீண்டும் வருவார் என்று அவர் கடைசியாக எழுதிய கடிதத்துடன் கடந்த 80 ஆண்டுகளாக காத்திருந்த மூதாட்டி தனது 103 வயதில் காலமானார். இறக்கும்போதும் அவர் பத்திரமாக வைத்திருந்த கடிதம் மற்றும் தலையணை உறையின் பின்னணி குறித்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
காதல்.. ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஏற்ப மாறி கொண்டே வருகிறது. இப்போது நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம். இளசுகளின் இன்றைய காதல் விரைவாக தோன்றி உடனடியாக முடிவுக்கு வந்து விடுகிறது. இதனால் தான் பிரேக் அப், திருமணம் ஆன பிறகு விவாகரத்து கோரி பலரும் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறுகின்றனர்.

ஆனால் ராணுவத்தில் பணியாற்ற சென்ற கணவனுக்காக அவர் எழுதிய கடிதம் மற்றும் திருமணத்தின்போது சீதனமாக வந்த தலையணை உறை ஆகியவற்றுடன் 80 ஆண்டுகளாக மூதாட்டி ஒருவர் காத்திருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை. இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
ராணுவத்தில் பணியாற்ற சென்ற கணவர் திரும்ப வருவார் என்று 80 ஆண்டுகளாக காத்திருந்த மூதாட்டி இறந்துள்ளார். மரண படுக்கையிலும் கூட கணவர் நினைவாக அவர் வைத்திருந்த பொருட்கள் தற்போது அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அப்படி என்ன நடந்தது? கணவர் மீது கொள்ளைப்பிரியம் கொண்ட இந்த மூதாட்டி யார்? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சீனாவை சேர்ந்த மூதாட்டி
அதாவது சீனாவின் குய்சோ மாகாணத்தை சேர்ந்தவர் டூ ஹுஷென்(வயது 103). இவரது கணவர் பெயர் ஹுவாங் ஜுன்ஃபு. இவர்கள் 2 பேருக்கும் 3 வயது வித்தியாசம். கணவர் ஹுவாங் ஜுன்ஃபுவை விட மனைவி டூ 3 வயது மூத்தவர். இவர்கள் 2 பேருக்கும் கடந்த 1940ம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்த சமயத்தில் அவர்களின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது. வீட்டில் வறுமை தலைவிரித்தாடியது. இதனால் எப்படியாவது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று ஹுவாங் ஜுன்ஃபு நினைத்தார்.
திருமணம் முடிந்த 2 ஆண்டுகள் மனைவியுடன் அவர் சேர்ந்து வாழ்ந்தார். இந்த சமயத்தில்அவர் ராணுவத்தில் பணியில் சேர முடிவு செய்தார். அதன்படி அவர் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். நாட்டின் பல்வேறு இடங்களில் பணி செய்தார். இதற்கிடையே தான் 1943ம் ஆண்டு மனைவி டூ கர்ப்பமானார். அவருக்கு 1944ம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. இதுபற்றி அறிந்ததும் ஹுவாங் ஜுன்ஃபு ராணுவத்தில் இருந்து வீட்டுக்கு வந்து தனது மகனை பார்த்தார். மகனுக்கு ஹுயாங் ஃபசாங் என்று பெயர் வைக்கப்பட்டது.
திரும்பி வராத கணவர்
அதன்பிறகு மீண்டும் ராணுவ பணிக்கு ஹுவாங் ஜுன்ஃபு சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மாறாக ஹுவாங் ஜுன்ஃபு தனது மனைவி டூ-வுக்கு கடிதம் மட்டுமே எழுதி வந்தார். கடைசியாக கடந்த 1952ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி கணவர் ஹுவாங் ஜுன்ஃபுவிடம் இருந்து மனைவி டூ-வுக்கு கடிதம் வந்தது.
அதில், ‛‛நான் மலேசியாவில் உள்ள சீன கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். மகன் ஹுயாங் ஃபசாங்கிற்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். குடும்பம் எப்படி ஏழ்மை நிலையில் இருந்தாலும் மகனை நன்றாக படித்து வைத்துவிடு. நான் சிறிது காலத்துக்கு பிறகு நிச்சயம் வருவேன்'' என்று கூறியிருந்தார்.
83 ஆண்டுகள் காத்திருந்து உயிரிழப்பு
இதுதான் அவரிடம் இருந்து வந்த கடைசி கடிதமாகும். அதன்பிறகு ஹுவாங் ஜுன்ஃபு எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. கடிதமும் மீண்டும் அவரிடம் இருந்து வரவில்லை. இருப்பினும் மனைவி டூ மனம் தளரவில்லை. என் கணவர் ஹுவாங் ஜுன்ஃபு எங்கேயும் சென்றிருக்கமாட்டார். அவர் நிச்சயம் என்னையும், என் மகனையும் தேடி வருவார். இருவரும் ஒன்றாக இணைவோம் என்ற நம்பிக்கையில் கணவருக்காக காத்திருக்க தொடங்கினார்.
1952ம் ஆண்டில் இருந்து கணவரின் வருகைக்காக அவர் காத்திருக்க தொடங்கினர். 2025 மார்ச் மாதம் ஆனாலும் கூட கணவர் ஹுவாங் ஜுன்ஃபு மட்டும் திரும்பி வரவில்லை. அதற்குள் மனைவி டூவுக்கு 103 வயது ஆனது. இந்நிலையில் தான் 83 ஆண்டுகளாக கணவருக்காக காத்திருந்த டூ தனது 103 வயதில் காலமானார். மார்ச் 8 ம் தேதி அவரது உயிர் பிரிந்தது.
கணவர் நினைவாக வைத்திருந்த கடிதம்
முன்னதாக கணவரிடம் இருந்து பணம் வராததால் டூ, பகலில் விவசாய வேலை மற்றும் மாலையில் துணிகளை நெய்யும் பணிகளையும் அவர் செய்ய தொடங்கி மகன் ஹுவாங்க் ஃபசாங்கை படிக்க வைத்தார். அவரும் படித்து ஆசிரியரானார். கடந்த 2022ம் ஆண்டு மகன் ஹுவாங்க் ஃபசாங் காலமான நிலையில் இப்போது டூ-வின் உயிர் பிரிந்துள்ளது.
டூ பயன்படுத்திய படுக்கையில் 1940ம் ஆண்டில் திருமணத்தின்போது சீராக வழங்கப்பட்ட தலையணை உறை மற்றும் 1952ல் கணவர் ஹுவாங் ஜுன்ஃபு கடைசியாக எழுதிய கடிதம் ஆகியவை இருந்தது. தனது சாவின் கடைசி நிமிடம் வரை டூ தனது கணவரின் நினைவாக அதனை தன்னுடனே வைத்திருந்தார். இது கணவர் ஹுவாங் ஜுன்ஃபு மீது அவர் காட்டிய பாசத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பேத்தி சொன்ன உருக்கமான தகவல்
இதுபற்றி அவரது பேத்தி ஹுவாங் லியிங் கூறுகையில், ‛‛என் பாட்டியை 2வது திருமணம் செய்து கொள்ளும்படி கூறினோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். என் கணவர் எனக்காக திரும்பி வருவார். நான் 2வது திருமணம் செய்தால் எனது கணவருக்கு செய்யும் துரோகம் என்று கூறி மறுத்துவிட்டார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக எனது தாத்தாவின் வருகைக்காக காத்திருந்த எனது பாட்டி இப்போது மறைந்துவிட்டார்.
எனது பாட்டி கடினமான வாழ்க்கையை வாழ்ந்தார். தாத்தாவின் நினைவிலேயே வாழ்க்கையை தொடர்ந்து வந்தார். தாத்தா மீதான நம்பிக்கையை மட்டும் கடைசி வரை விடவேயில்லை. என் தந்தை உள்பட குடும்பத்தினரிடம் எப்போதும் நன்றாக படிக்க வேண்டும். நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்தார். இப்போது மறைந்துவிட்டார்'' என்று உருக்கமாக கூறி கண்கலங்கினார்.












Click it and Unblock the Notifications