உலுக்கியெடுத்த படம்.. மகளின் கையை.. 3 நாளாக கெட்டியா பிடித்திருந்த அப்பா.. துரத்தும் துருக்கி துயரம்
அவரை புகைப்படம் எடுக்கும்போது அதை அவர் தடுக்கவில்லை. இந்த படம் உலகிற்கு துருக்கியின் பாதிப்புகளை தெரியப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
அங்காரா: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தனது மகளின் கைகளை பிடித்தவாறு தந்தை ஒருவர் இரவு பகலாக மீட்பு படையினருக்காக காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக லேசான நில அடுக்குகளை கொண்ட மண்டலங்களில் துருக்கியும் ஒன்று. இந்த மண்டலங்களில் நில அதிர்வு ஏற்படுமாயின் அது பலத்த சேதத்தை ஏற்படுத்தும். கடந்த 1939ம் ஆண்டு இப்படி ஏற்பட்ட ஒரு நில நடுக்கம் சுமார் 35 ஆயிரம் பேரை பலி வாங்கியது. ஏறத்தாழ நூற்றாண்டுக்கு பின்னர் தற்போதும் மீண்டும் இதேபோல மற்றொரு நில நடுக்கம் கடந்த 6ம் தேதி அதிகாலை உருவானது. துருக்கியே அசந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென கட்டிடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்துள்ளன.
என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஏற்பட்டு சுமார் 6 மணி நேரம் கழித்துதான் அண்டை நாடுகளின் மீட்புப் படைகள் துருக்கியை அடைந்தன. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் துருக்கி வீரர்களுடன் இணைந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் அன்று மாலை 4 மணியளவில் திடீரென மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

தொடர் நிலநடுக்கம்
முதல் முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான நிலையில், இரண்டாவது நிலநடுக்கம் 7.6 ஆக பதிவாகியிருந்தது. இதனையடுத்து ஒரு சில மணி நேரத்திற்கெல்லாம் 5 முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. அதேபோல துருக்கியில் தற்போது கடும் பனி பெய்து வரும் நிலையில் நாட்டின் கிழக்கு பகுதியிலிருந்து தலைநகர் அங்காராவுக்கு இயக்கப்படும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. எனவே மீட்பு படையினர் தலைநருக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்த சிரமங்களுக்கு இடையேயும் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு பலரை உயிருடன் மீட்டுள்ளனர்.

மீட்பு பணி
ஆனால் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு சடலம் கிடப்பதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மொத்தமாக தற்போது வரை சுமார் 21 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாடு சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் AFP செய்தி ஊடகத்தின் புகைப்படக்கலைஞர் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று சர்வதேச அளவில் துருக்கியின் நிலையை விளக்கியிருக்கிறது. கஹ்ராமன்மாராஸ் பகுதியில் நிலைமையை விரிவாக பதிவு செய்து கொண்டிருந்த மூத்த புகைப்படக் கலைஞரான ஆடெம் அல்டான் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தனது மகளின் கையை விடாமல் பிடித்திருந்த தந்தையை புகைப்படம் எடுத்திருக்கிறார்.

புகைப்படம்
இம்மாதிரியான சூழல்களில் தங்களை புகைப்படம் எடுப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படி இருக்கும்போது அந்த தந்தை ஆடெமை அருகில் அழைத்து பேசியிருக்கிறார். தன்னை புகைப்படம் எடுப்பதை நிறுத்த வேண்டாம் என்றும், இந்த புகைப்படம் துருக்கியின் தற்போதைய நிலையை உலகிற்கு எடுத்துரைக்கும் என்றும் கூறியுள்ளார். சம்பவம் குறித்த ஆடெம், தந்தையிடம் விசாரிக்கையில் ஒரு சில தகவல்களை பெற முடிந்துள்ளது. அந்த தந்தையின் பெயர் ஹன்சர் என்றும், அவர் தன்னுடைய 15 வயது மகள் இர்மார்க்கை தூங்க வைத்துவிட்டு வீட்டுக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்ததாகவும் ஆனால் நொடிப்பொழுதில் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுக்களை போல சரிந்து விழுந்துவிட்டது எனவும் கூறியுள்ளார்.

மகள்
சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே மகள் இர்மார்க் உயிரிழந்துவிட்டதாகவும், அதற்கு முன்னர் "அப்பா என்னை விட்டு போகாதீங்க" என்று கேட்டுக்கொண்டதால் அவளது கையை பிடித்துக்கொண்டே இருந்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க நா தழுதழுக்க கூறியுள்ளார். வேறு யாரேனும் இடிபாடுகளுக்குள் உயிருடன் இருக்கிறார்களா? என்று கேட்டபோது நீண்ட மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது. இதனையடுத்து ஆடெம் எதுவும் கேட்காமால் அழுதுக்கொண்டே அங்கிருந்து வந்துவிட்டதாக கூறியுள்ளார். கிட்டதட்ட மூன்று நாட்களாக உயிரிழந்த தனது மகளின் கைகளை பிடித்துக்கொண்டு தந்தை ஹன்சர் அங்கேயே இருந்திருக்கிறார். இந்த புகைப்படம் சர்வதேச அளவில் முக்கியமான பல பத்திரிகைகளில் முன் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது.












Click it and Unblock the Notifications