திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் விமானம் புறப்படும் போது அதன் சக்கரம் தனியாக கழன்று விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து விமானி பத்திரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் மிகவும் பிஸியான நகரம் ஜோகன்னஸ்பர்க். ஜோகன்னஸ்பர்க் விமான நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான விமானங்களை கையாள்கிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல ஃப்ளை சஃபார் எனும் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம், ஜோகன்னஸ்பர்க்கின் ஓர் டாம்போ விமான நிலையத்திலிருந்து 1300 கி.மீ தொலைவில் உள்ள தென்னாப்பிரிக்காவின் தலைநகரான கேப் டவுன் விமான நிலையத்திற்கு புறப்பட தயாரானது.

வழக்கமான எல்லா சோதனைகளும் முடிந்த பின்னர் விமானம் ஓடுதளத்திலிருந்து மேலெழும்பி வானத்தில் பறந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று விழுந்தது. சுமார் 41,000 கிலோ எடைகொண்ட போயிங் 737 விமானத்திற்கு ஒவ்வொரு சக்கரமும் முக்கியமானது. இந்த விமானம் தரையிறங்கும் போது சுமார் 250 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வரும் அப்போது சக்கரங்களின் பேலன்ஸ் போதுமானதாக இல்லையெனில் நிச்சயம் பேரழிவுதான் ஏற்படும்.
இதே சூழலைதான ஃப்ளை சஃபார் நிறுவனத்தின் விமானமும் எதிர்கொண்டது. விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததை விமானியிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து விமானம் உடனடியாக தரையிறங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தை தவிர, ஜோகன்னஸ்பர்க்கில் வேறு எந்த விமானமும் தரையிறங்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே மற்ற விமானங்கள் அருகில் இருக்கும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.
அதேபோல, போயிங் 737 விமானத்திற்கு ஹோல்டிங் பேட்டர்ன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு கிடைத்தால், விமானங்கள் உடனடியாக தரையிறங்காமல் விமான நிலையத்தை நீள் வட்ட பாதையில் சிறிது நேரம் சுற்றி வர வேண்டும். இதனால் விமானத்தில் உள்ள எரிபொருள் கணிசமாக குறைந்துவிடும். எனவே விமானம் தரையிறங்கும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் விமானம் உடனடியாக தீப்பிடிக்காது.
இப்படி திட்டமிடப்பட்டு விமானம் தனது எரிபொருளில் கணிசமானவற்றை பயன்படுத்திவிட்டு தரையிறங்கியது. தரையிறங்கும்போது விமானத்தின் அடிப்பாகத்திலிருந்து தீப்பொறி பறந்து. கரும்புகையும், தீப்பொறியும் சேர்ந்து விமானத்தை தீப்பிடிக்க வைத்துவிடுமோ? என விமான நிலைய ஊழியர்கள் பயந்துக்கொண்டிருந்தனர். ஆனால் நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
விமானம் பத்திரமாக தரையிறங்கியது. அதிலிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட முக்கிய காரணம், விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்துவிட்டது என்பதை உடனடியாக பார்த்து எச்சரித்த ஊழியர்தான். அதேபோல, விமானியின் சாதுர்யமும் விபத்தை தவிர்க்க முக்கிய காரணமாகும்.












Click it and Unblock the Notifications