துண்டு துண்டாகும் வங்கதேச ராணுவம்? என்ன நடந்தது? மோதலுக்கு நடுவே இந்தியாவுக்கு வந்த குட்நியூஸ்
டாக்கா: வங்கதேசம் நம்மை சீண்டி வரும் நிலையில் அந்த நாட்டின் ராணுவத்தில் அதிகார போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கதேசம் ராணுவம் 3 பிரிவாக பிரிந்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நம் நாட்டுக்கு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.
அண்டை நாடான வங்கதேசத்துக்கும், நம் நாட்டுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமாவுக்கு பிறகு அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இந்த அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் தான் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம்.

ஏனென்றால் ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நட்புடன் இருந்தார். ஆனால் முகமது யூனுஸ் நம் நாட்டை எதிர்த்து வருகிறார். இவர் அந்த நாட்டின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றதில் இருந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட இந்தியா மீதான எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர்களுடன் முகமது யூனுஸ் நெருங்கி செயல்பட தொடங்கி உள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் அடுத்த மாதம் வங்கதேசம் சென்று அந்த நாட்டு வீரர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க உள்ளது.பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து ஏவுகணை, துருக்கி நாட்டிடம் இருந்து நவீன தொழில்நுட்பம் கொண்ட டேங்குகளை வாங்க வங்கதேசம் ஆர்வம் காட்டி வருகிறது. இது நம் நாட்டுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் தற்போது வங்கதேச ராணுவத்தில் 3 அதிகார மையம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது வங்கதேசத்தின் ராணுவத்தில் அதிகாரத்தை தக்கவைப்பது, அதிகாரத்தை பெறுவது என்று 3 அதிகாரிகள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஷேக் ஹசீனா ஆதரவாளர் தரப்பு அணியும் உள்ளது.
அதன்படி வங்கதேச ராணுவ தளபதியாக ஜெனரல் வாக்கர் உஸ் ஜமான் உள்ளார். இவர் தான் வங்கதேச ராணுவத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தபோது இவர் தலைமையில் தான் ராணுவம் நாட்டை கட்டுக்குள் எடுத்தது. அதன்பிறகு தான் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது. வாக்கர் உஸ் ஜமான், ஷேக் ஹசீனாவின் உறவினர். தற்போது அவர் நடுநிலைவாதியாக கருதப்படுகிறார். இப்போது வாக்கர் உஸ் ஜமான் தலைமையில் தான் வங்கதேச ராணுவம் செயல்பட்டு வருகிறது.
இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் தான் ஷேக் ஹசீனாவால் வங்கதேச ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 2026ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் இந்த பொறுப்பில் இருப்பார். அதன்பிறகு ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்கர் உஸ் ஜமான் ராணுவ தளபதியாக பொறுப்பேற்று இன்னும் ஒரு ஆண்டு கூட நிறைவு பெறவில்லை. இதனால் ராணுவ தளபதி பதவியில் தொடர விரும்புகிறார். எனவே ராணுவத்தை முழுமையாக கட்டுக்குள் வைக்கும் வேலைகளை செய்ய தொடங்கி உள்ளார்.
அதேபோல் 2வது நபர் யார் என்றால் டாக்கா மிர்பூர் கன்டோன்மென்ட்டில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கமாண்டன்ட் அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் முகமது ஷாகினுல் ஹக் செயல்பட்டு வருகிறார். இவர் ராணுவ தலைவர் பதவியை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். இவருக்கு ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளராக அறியப்படும் மேஜர் ஜெனரல் முகமது மொயின் கானின் ஆதரவு என்பது உள்ளது. முகமது மொயின் கான் என்பவர் வங்கதேச ராணுவத்தின் 9வது டிவிஷனில் தலைவராக உள்ளார். வங்கதேச ராணுவத்தை பொறுத்தவரை இந்த அமைப்பு மிகவும் பலமிக்கதாக கருதப்படுகிறது.
முகமது மொயின் ஆதரவு அளிக்கும் லெப்டினன்ட் ஜெனரல் முகமது ஷாகினுல் ஹக் இதற்கு முன்பு பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 1989ம் ஆண்டில் அவர் ராணுவத்தில் சேர்ந்தார். கடந்த 2022ம் ஆணடில் வங்கதேச ராணுவ தலைமையகத்தில் முதன்மை தலைமை தளபதியாக செயல்பட்டார். ஆயுதங்கள், உபகரணங்கள், புள்ளிவிவர இயக்குநரகத்தின் இயக்குநராகவும் செயல்பட்டார். இவர் சிறப்பாக செயல்பட்டதாக கூறி ‛ஸ்வோர்ட் ஆஃப் ஹானர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 3 வது நபர் யார் என்றால் அது லெப்டினன்ட் ஜெனரல் முகமது பைஜுர் ரஹ்மான். இவர் வங்கதேச ராணுவத்தின் Quartermaste General அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்த பொறுப்புக்கு வருவதற்கு முன்பு உளவுப்பிரிவில் செயல்பட்டு வந்தார். கடந்த 1990ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்தார். இப்போது ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்த கல்லூரி மாணவர்களுடன் நெருக்கமாக உள்ளார். முகமது யூனுஸின் ஆலோசகர்களில் ஒருவராக உள்ள மெக்பூஸ் ஆலமின் நெருக்கம் காட்டி வருகிறார். இந்த மெக்பூஸ் ஆலம் யார் என்றால் ஹிஸ்புட் தாஹீர் அமைப்பை சேர்ந்தவர். அதோடு அவர் வங்கதேச ராணுவத்தின் உளவுத்துறை பிரிவின் தலைவராக செயல்பட்டவர்.
இவர் தான் தற்போதைய வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ரஹ்மான் நாட்டில் இல்லாதபோது அந்த நாட்டின் அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான வேலையை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் வரும் நாட்களில் முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பதவியை விட்டு விட்டு வெளிநாடு செல்லலாம் என்று கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் தற்போதைய ராணுவ தளபதி வாக்கர் உஸ் ரஹ்மானை நீக்கிவிட்டு அந்த பொறுப்புக்கு செல்ல வேண்டும் என்பதை முகமது பைஜுர் ரஹ்மான் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி வங்கதேச ராணுவ தளபதி பதவியை தக்க வைத்து கொள்ள வாக்கர் உஸ் ரஹ்மான் போராடி வருகிறார். அதேவேளையில் அவரிடம் இருந்து அந்த பொறுப்பை பெற லெப்டினன்ட் ஜெனரலாக செயல்பட்டு வரும் முகமது ஷாகினுல் ஹக் மற்றும் முகமது பைஜுர் ரஹ்மான் ஆகியோர் காய்நகர்த்தி வருகின்றனர். இவர்கள் இடையேயான இந்த அதிகார போட்டி என்பது வங்கதேசத்துக்கு புதிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்தியா உள்பட எந்த நாட்டுடன் மோதினாலும் ஒரு நாட்டின் ராணுவம் மிகவும் கட்டுக்கோப்பாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் மோதலில் எதிரிகளை சமாளிக்க முடியும். ஆனால் வங்கதேசம் நம் நாட்டுடன் மோதி வரும் நிலையில் அந்த நாட்டின் ராணுவம் 3 அதிகார மையத்தில் செயல்பட்டு வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் வங்கதேச ராணுவத்தில் உள்ள இந்த குழப்பம் என்பது நம் நாட்டுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications