பிராட் பிட் - ஏஞ்செலீனா ஜூலி பிரிந்தனர்!
லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட்டின் கனவு ஜோடியாக வலம் வந்த பிராட் பிட் - ஏஞ்செலீனா ஜூலி தம்பதி பிரிய முடிவு செய்து விட்டது. கணவரிடமிருந்து விவாகரத்து கோரி கோர்ட்டை அணுகியுள்ளார் ஜூலி.
ஜூலி விவாகரத்து கோரியிருப்பதை அவரது வழக்கறிஞர் ராபர்ட் ஆஃபர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளிப்படையாக பேச ஜூலி தயாராக இல்லை. இதுகுறித்து யாரும் கேள்வி கேட்பதையும் அவர் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் ராபர்ட்.

தனது விவாகரத்து மனுவில், தன்னுடைய 6 குழந்தைகளையும் தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளாராம் ஜூலி. பிராட் பிட்டால் குழந்தைகளை பொறுப்பாக வளர்க்க முடியாது என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
பிராட் பிட் - ஜூலி தம்பதி கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தனர். 2014ம் ஆண்டுதான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். செப்டம்பர் 15ம் தேதியுடன் இருவரும் பிரிந்து விட்டனராம்.
41 வயதாகும் ஜூலியும், 52 வயதாகும் பிராட் பிட்டும் ஹாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தவர்கள். அனைவரும் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு இருவரும் அன்னியோன்யமாக இருந்தவர்கள். நடிகையாக மட்டும் அல்லாமல், மனிதாபிமான நடவடிக்கைகளிலும், குறிப்பாக அகதிகள் மறு வாழ்வு தொடர்பாகவும் செயல்பட்டு வந்தவர் ஜூலி.
இவரது ஆறு குழந்தைகளில் மூன்று பேர் தத்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். அதாவது கம்போடியா, வியட்நாமிலிருந்து இரு மகன்களையும், எத்தியோப்பியாவிலிருந்து ஒரு மகளையம் ஜூலி தத்தெடுத்து வளர்த்து வருகிறார். பிராட் பிட்- ஜூலிக்குப் பிறந்த குழந்தைகள் மூவர் ஆவர்.
பிராட் பிட்டு, ஜூலிக்கு 3வது கணவர் ஆவார். அதற்கு முன்பு நடிகர் ஜானி லீ மில்லர், பில்லி பாப் தார்ன்ட்ன் ஆகியோரை மணந்து பின்னர் பிரிந்தார் ஜூலி.
மறுபக்கம் பிராட் பிட்டுக்கு, ஜூலி 2வது மனைவி ஆவார். பிராட் பிட்டின் முதல் மனைவி நடிகை ஜெனீபர் அனிட்சன் ஆவார். 2003ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்தனர். பின்னர் 2005ல் பிரிந்து விட்டனர். ஜூலியுடன் பிராட் நெருக்கமாக இருந்ததை அறிந்தே அனிட்சன், பிராட் பிட்டை பிரிந்தார் என்று சொல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications