உருவாகும் முஸ்லீம் நாடுகளின் "நேட்டோ.." இனி பாகிஸ்தானை தாக்கினால் சவுதி வரும்? இந்தியாவுக்கு சிக்கல்?
டெல்லி: புவிசார் அரசியலில் இப்போது பல மாற்றங்கள் நடந்து வரும் சூழலில் பாகிஸ்தான் சவுதி இடையே முக்கியமான ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் இருக்கும் ஒரு முக்கியமான பாயிண்டு தான் இப்போது முக்கியமானதாகப் பேசுபொருள் ஆகியுள்ளது. அது என்ன பாயிண்டு.. இந்த ஒப்பந்தம் ஏன் பேசுபொருள் ஆகியுள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
புவிசார் அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு குறுகிய காலத்தில் உலக அரசியலே மொத்தமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் இந்தியா அமெரிக்கா இடையே பல காலமாக இருந்த நல்லுறவு பாதிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் தளபதியை அழைத்து அமெரிக்கா விருந்து கொடுத்தது.

புவிசார் அரசியல்
இதற்குப் பதிலடி கொடுத்தும் வகையில் இந்தியாவும் கூட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நடந்த நிகழ்வுகள் சர்வதேச அளவில் கவனம் ஈர்ப்பதாக அமைந்தது. இவை எல்லாம் நமது எதிர்காலத்தையே தீர்மானிக்கக் கூடியதாக இருப்பதால் இவற்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தான் சவூதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இப்போது முக்கியமான ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதிக்குச் சென்றுள்ள நிலையில், அப்போது தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வழிவகை செய்ய இந்த ஒப்பந்தம் உதவும்.
முக்கியமான பாயிண்டு
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், "எந்தவொரு நாட்டின் மீதும் நடத்தப்படும் தாக்குதல் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்" என்பதாகும். இந்த பாயிண்டு தான் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதாவது சவுதி அல்லது பாகிஸ்தான் மீது எந்தவொரு நாடு தாக்குதல் நடத்தினாலும் அது இரு நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இப்போது ஒரு நாட்டில் பாகிஸ்தான் அத்துமீறுகிறது என வைத்துக் கொள்வோம். அந்த நாடு பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்தால்.. அது பாகிஸ்தான்- சவுதி இரு நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். பாகிஸ்தானுக்கு ஆதரவாக சவுதி வரும் என்பதே இந்த ஒப்பந்தம். பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியா மீது அத்துமீறும் நிலையில், இப்படியொரு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பது பேசுபொருளாகிறது.
முஸ்லீம் நாடுகளின் நேட்டோ
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இதுபோன்ற ஒரு பாயிண்டு இருக்கிறது. அதாவது நேட்டோ உறுப்பு நாடுகளில் எந்தவொரு நாட்டின் மீதும் யார் தாக்குதல் நடத்தினாலும் ஒட்டுமொத்த நேட்டோ அமைப்பும் அந்த நாட்டிற்கு ஆதரவாக வரும். பாகிஸ்தான் இஸ்லாமிய நாடுகளை இணைத்து அதுபோல ஒரு நேட்டோ அமைப்பை உருவாக்க முயலும் நிலையில், அதன் ஒரு தொடக்கப் புள்ளியாக இது இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது..
வாய்ப்பு கம்மி
அதேநேரம் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை சவுதி எடுக்க வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் இந்தியா சவுதி இடையே மிக சிறப்பான உறவு இருக்கிறது. பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு இதுவரை மூன்று முறை பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக 2016ல் அவருக்கு சவூதி அரேபியாவின் உயரிய சிவில் விருதான 'கிங் அப்துலாசிஸ் சாஷ்' கூட வழங்கப்பட்டது. மேலும், இந்தியா பாகிஸ்தான் மோதல் சமயத்திலும் பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை. இதனால் இந்தியாவுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை அவர்கள் எடுக்க வாய்ப்புகள் கம்மி!












Click it and Unblock the Notifications