பாகிஸ்தான் பக்கம் ஓடும் வங்கதேசம்.. உற்று பார்க்கும் இந்தியா.."ரொம்ப தப்பு.." நெட்டிசன்கள் ஆவேசம்!
டாக்கா: இந்தியா பற்றித் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்புவதை வங்கதேச இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு அவர் கொடுத்த பரிசு ஒன்றில் இருந்த வங்கதேச வரைபடம் குறித்த போட்டோ இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. அதில் இந்தியாவின் பகுதிகள் வங்கதேசம் என்பது போலக் காட்டப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே நல்லுறவு இருந்து வந்தது. ஆனால், முகமது யூனுஸ் எப்போது வங்கதேச தலைவராகப் பதவியேற்றாரோ அப்போது முதலே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் தொடர்ந்து வருகிறது. இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளைச் சொல்வதை யூனுஸ் வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

வங்கதேச இடைக்கால தலைவர்
இதற்கிடையே வங்கதேச இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸின் மற்றொரு செயல் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவுகளைக் கடுமையாகப் பாதிப்பதாகவே இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த அவரது கருத்து சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது.
சர்ச்சை
அவர் சமீபத்தில் பாகிஸ்தான் ஜெனரல் ஒருவரைச் சந்தித்து பரிசு ஒன்றை வழங்கினார். அதில் அசாம் உட்பட இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கதேசத்தின் ஒரு பகுதியாக என்பது போலச் சித்தரிக்கப்பட்டிருந்தது. இது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதாவது பாகிஸ்தான் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷாம்ஷாத் மிர்சா சமீபத்தில் டாக்காவுக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் முகமது யூனுஸை சந்தித்தார். 1971ல் பாகிஸ்தானில் இருந்து தான் வங்கதேசம் பிறந்தது. அந்த விடுதலைக்காக வங்கதேசத்தில் பலர் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். அப்போது முதலே பாகிஸ்தான் வங்கதேசம் இடையே மோதல் போக்கே நிலவி வந்தது. ஆனால், முகமது யூனுஸ் அந்தப் போராட்டங்களை மறந்துவிட்டு பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். அதன் நீட்சியாகவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
மோசம்
பாகிஸ்தான் ஜெனரலுடனான இந்தச் சந்திப்பு தொடர்பான படங்களை யூனுஸ் ட்விட்டரில் வெளியிட்டார். அதில் மிர்சாவுக்கு 'ஆர்ட் ஆஃப் ட்ரையம்ப்' என்ற புத்தகத்தை முகமது யூனுஸ் பரிசளிக்கும் படம் தான் இந்தச் சர்ச்சைக்குக் காரணம்! ஏனென்றால் அந்தப் புத்தகத்தின் அட்டையில், வங்கதேசத்தின் சர்ச்சைக்குரிய வரைபடம் இருந்தது. இந்த வரைபடம், இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களையும் வங்கதேசத்தின் ஒரு பகுதியாகக் காட்டியது. இது வங்கதேசத்தில் உள்ள தீவிரவாத இயக்கங்களின் "கிரேட்டர் வங்கதேசம்" கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த போட்டோ பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், முகமது யூனுஸ் இந்தியாவின் இறையாண்மையை மீறிவிட்டதாகக் கடுமையான கண்டனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன. பலரும் யூனுஸ் செயல்பாடுகளைச் சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகிறார்கள். அதேநேரம் இந்தச் சர்ச்சை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்னும் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
வங்கதேச சூழல்
வங்கதேசத்தில் கடந்தாண்டு மாணவர் போராட்டத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்ந்தது. அப்போது 2024 ஆகஸ்டில் யூனுஸ் பொறுப்பேற்றார். அதன்பிறகு வங்கதேசம்- பாகிஸ்தான் உறவுகளில் மாற்றம் ஆரம்பித்தது.. மேலும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் குறித்து யூனுஸ் சர்ச்சை கிளப்புவது இது முதல் முறையல்ல. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் சென்றிருந்தபோது முகமது யூனுஸ் இந்தியா பற்றி சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தார்.
அதேபோல கடந்த மே மாதம், யூனுஸின் நெருங்கிய உதவியாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஸ்லூர் ரஹ்மான் கூறிய கருத்துகள் சர்ச்சையாக வெடித்தது. அதாவது பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைக் கைப்பற்றுவதில் சீனாவுக்கு வங்கதேசம் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் அத்துமீறி கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications