சீனா விவகாரத்தில்.. "சாவர்க்கர்" பாணியை கடைப்பிடிக்கிறது பாஜக அரசு.. ராகுல் காந்தி கடும் தாக்கு
"சீனா பல மடங்கு பொருளாதாரத்தில் பெரியது. பொருளாதாரத்தில் சிறிய நாடான நாம், மிகப்பெரிய பொருளதார சக்தியுடன் சண்டையிட முடியுமா?"
பெய்ஜிங்: சீனா உடனான எல்லை விவகாரத்தில் சாவர்க்கர் பாணியை பாஜக தலைமையிலான மத்திய அரசு கடைப்பிடித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதை விமர்சிக்கும் வகையில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.
தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது சாவர்க்கரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையான நிலையில், மீண்டும் சாவர்க்கரை அவர் மேற்கோள்காட்டி இருப்பது பாஜகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.

சீண்டும் சீனா
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை நீண்டநாட்களாக சொந்தம் கொண்டாடி வரும் சீனா, தற்போது தனது பார்வையை லடாக் மீதும் திருப்பியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு லடாக்கில் அத்துமீறி நுழைந்த சீனப்படையினரை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். இந்த சூழலில், கடந்த நவம்பர் மாதம் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாருக்குள் நுழைந்த சீனப்படையினர் அந்தப் பகுதியை ஆக்கிமிக்க முயன்றனர். ஆனால், இந்திய ராணுவ வீரர்களின் தீரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீன ராணுவத்தினர் புறமுதுகிட்டு ஓடினர்.

எல்லையில் ராணுவம் குவிப்பு
இந்தியாவிடம் இவ்வாறு இரண்டு முறை குட்டுப் போட்டு ஓடியது சீனாவுக்கு சர்வதேச அளவில் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னை அமெரிக்காவுக்கு நிகரான வல்லராக காட்டிக் கொள்ள ஆசைப்படும் சீனா, இந்தியாவிடம் மண்டியிட்டதை உலக நாடுகள் கடுமையாக விமர்சித்தன. இதனால் ஆத்திரத்தில் உள்ள சீனா, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை ஒட்டிய தனது எல்லைப் பகுதியில் ராணுவத் துருப்புகளை குவித்துள்ளது.

"எப்படி சண்டையிட முடியும்?"
இதனிடையே, சீனா இவ்வாறு ராணுவத் துருப்புகளை இந்திய எல்லையில் குவித்து வருவது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கேள்வியெழுப்பி இருந்தது. அதற்கு பதிலளித்த அவர், "இந்தியாவை ஒப்பிடுகையில் சீனா பல மடங்கு பொருளாதாரத்தில் பெரியது. பொருளாதாரத்தில் சிறிய நாடான நாம், மிகப்பெரிய பொருளதார சக்தியுடன் சண்டையிட முடியுமா?" எனக் கூறினார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

சாவர்க்கர் பாணி
இந்நிலையில், ஜெய்சங்கரின் இந்தக் கருத்து குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "பெரிய பொருளாதார நாடான சீனாவுடன் சிறிய பொருளாதார நாடான இந்தியா எப்படி சண்டையிட முடியும் என ஜெய்சங்கர் கூறியதை கேள்விப்பட்டேன். நம்மை ஆண்ட பிரிட்டிஷாருடன் இந்தியா சண்டையிட்ட போது, பிரிட்டிஷை விட இந்தியா பெரிய பொருளாதாரமாக இருந்ததா? சீனாவுடன் எப்படி சண்டையிட முடியும் என கேட்பது தேசப்பற்று அல்ல. சுத்த கோழைத்தனம். தம்மைவிட பலசாலியான நபரிடம் பணிந்து போவதுதான் சாவர்க்கரின் கொள்கை. அந்தக் கொள்கையைதான் சீன விவகாரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications