"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி
நியூயார்க்: "இங்கே நிற்கும் ஆடி உட்பட அனைத்து சொகுசு கார்களும் தினமும் 9 to 5 சாதாரண வேலை செய்பவர்களின் கார்கள். அமெரிக்காவில் ஒருவர் சொகுசு கார் வாங்க தொழிலதிபராகவோ உயர் பதவியிலோ இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண ஊழியரே கார், வீடு வாங்கி வார இறுதி நாட்களையும் மகிழ்ச்சியாக கழிக்க முடியும். ஆனால் இந்தியாவில் இரவு பகல் பாராமல் வார இறுதி நாட்களிலும் உழைக்கும் ஒரு சாதாரண ஊழியரால் இதுபோன்ற ஒரு வாழ்க்கையை வாழ முடியுமா?" என்று - அமெரிக்காவில் வசிக்கும் இந்திய யூடியூப் பிரபலம் ராகுல் மிஸ்ரா என்பவர் கேள்வி கேட்டு போட்ட வீடியோ பரவி வருகிறது. அவருக்கு இந்தியர்கள் பலர் தரமான பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்தியாவை ஒப்பிடும் போது, அமெரிக்காவில் சம்பளம் அதிகம், வாழ்க்கை தரம் அதிகம் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய யூடியூப் பிரபலம் ராகுல் மிஸ்ரா வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார்.அந்த வீடியோவில் அமெரிக்காவில் ஒருவர் சொகுசு கார் வாங்க தொழிலதிபராகவோ உயர் பதவியிலோ இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண ஊழியரே கார், வீடு வாங்கி வார இறுதி நாட்களையும் மகிழ்ச்சியாக கழிக்க முடியும். ஆனால் இந்தியாவில் இரவு பகல் பாராமல் வார இறுதி நாட்களிலும் உழைக்கும் ஒரு சாதாரண ஊழியரால் இதுபோன்ற ஒரு வாழ்க்கையை வாழ முடியுமா? என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த தமிழக நெட்டிசன்கள், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பலவற்றில் இன்று நடைமுறையில் இருக்கும் மருத்துவ முறை மிகவும் கொடூரமானது. அங்கு உங்களுக்கு ஒரு நோய் அல்லது உடல் உபாதை ஏற்பட்டால், நீங்கள் நினைத்த உடனே ஒரு சிறப்பு மருத்துவரைச் சந்தித்துவிட முடியாது. முதலில் நீங்கள் பொது மருத்துவரைத் (GP) தேடிச் செல்ல வேண்டும். அவரிடம் அனுமதி பெறவே பல நாட்கள் காத்திருக்க வேண்டும். அவர் உங்களைப் பரிசோதித்து, பரிந்துரை கடிதம் எழுதிக் கொடுத்த பிறகுதான், நீங்கள் ஒரு சிறப்பு மருத்துவரை அணுக முடியும் என்று கூறியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் வெளியிட்ட பதிவில் மூட்டு வலி வந்த மூணாவது நிமிஷம் ஆர்த்தோ டாக்டரைப் பார்த்து - பத்தாவது நிமிடம் பார்மசியில் மெடிசின் வாங்கிவிட்டு - பதினைந்தாவது நிமிஷம் பிக்பாஸ் பார்க்க உட்கார முடியுமா உங்களால பாஸ்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "இந்தியாவில் இப்படி வாழ முடியுமா?" என்று கேட்கிறார்கள்... நானோ வேறு ஒரு கேள்வி கேட்பேன்.
உலகத்தர மருத்துவ அமைப்பு இருக்கிறது என்று பெருமை பேசும் ஒரு நாட்டில், நோயாளி நேரடியாக மருத்துவரைச் சந்திக்க முடியாமல் இருந்தால், அந்த மருத்துவ அமைப்பால் என்ன பயன்?
மேற்கத்திய நாடுகளில் பல இடங்களில்: முதலில் பொது மருத்துவரைப் பார்க்க வேண்டும், பொது மருத்துவர் அனுமதி கிடைக்கக் காத்திருக்க வேண்டும், பிறகு சிறப்பு மருத்துவருக்கான பரிந்துரை கடிதம், சிறப்பு மருத்துவர் அனுமதிக்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும், அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் இன்னும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
முழங்கால் வலி வந்த மனிதன் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரைச் சந்திக்கும் நேரத்திற்குள், வலியுடன் வாழப் பழகிவிடுவார்! இந்தியாவில்? இன்று வலி, இன்று சிறப்பு மருத்துவர் கலந்தாலோசனை, இன்று அல்லது நாளை எக்ஸ்-கதிர் அல்லது வருடி பரிசோதனை, சில நாட்களில் அறுவை சிகிச்சை திட்டமிடலாம், ஒரு வாரத்தில் வீட்டிற்குத் திரும்பலாம்.
இதுதான் பலர் கவனிக்காமல் விடும் இந்தியாவின் மிகப்பெரிய பலம். பிஎம்டபிள்யூ, டெஸ்லா, டாட்ஜ், மஸ்டாங் எல்லாம் வைத்திருக்கலாம். ஆனால் ஒரு எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரைச் சந்திக்க 6 மாதம் காத்திருக்க வேண்டியிருந்தால், அந்த கார் என்ன பயன்?
பெராரி ஓட்டிக்கொண்டு அனுமதிக்காகக் காத்திருப்பதை விட, ஆட்டோவில் சென்று அதே நாளில் மருத்துவரைச் சந்திப்பதே பெரிய ஆடம்பரம்.
கார் என்பது வசதி.
வீடு என்பது சொத்து.
ஆனால் தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும் மருத்துவ சேவையே உண்மையான செல்வம். உயர்தர மருத்துவ அமைப்பு இருப்பது முக்கியமல்ல. அதை நோயாளி நேரத்தில் பயன்படுத்த முடியுமா என்பதுதான் முக்கியம். ஒரு மருத்துவ அமைப்பின் தரத்தை அதன் கட்டிடங்கள், இயந்திரங்கள், அல்லது தொழில்நுட்பம் தீர்மானிக்காது. நோயாளி இன்று உதவி கேட்டால், இன்று உதவி கிடைக்கிறதா என்பதுதான் தீர்மானிக்கும். ஆகவே... ஆடம்பரம் என்பது கார் அல்ல.
ஆடம்பரம் என்பது நேரத்தில் கிடைக்கும் சரியான மருத்துவ சேவை. ஆரோக்கியமே செல்வம்.
அணுகக்கூடிய மருத்துவ சேவையே உண்மையான செல்வம்". இவ்வாறு கூறியுள்ளார். இந்த கருத்தை பலரும் ஆமோதித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications