"இந்தியா உடன் நல்லுறவு.. அதுவே எனது விருப்பம்.." திடீரென டோனை மாற்றும் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன மேட்டர்
ஒட்டாவா: இந்தியா-கனடா உறவு மிக மோசமான நிலைக்குச் சென்று வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று செய்தியாளர்களைச் சந்திக்கும் போது சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கனடாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைக்கு இந்திய ஏஜெண்டுகள் காரணம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இந்த மோதலுக்குக் காரணமாகும். அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது.
கனடா பிரதமர்: இதற்கிடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து மீண்டும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக நம்பகமான குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தக் கனடா இன்னும் உறுதியுடன் இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய ட்ரூடோ, கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவில் இருப்பது மிகவும் முக்கியமானது என்று கூறினார். மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திடீரென டோனை மாற்றிய ட்ரூடோ இப்படிப் பேசியிருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சீரியஸாக இருக்கிறோம்: மாண்ட்ரீலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரூடோ, "சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாகவும் உறவை கொண்டிருக்க வேண்டும். இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இருக்கிறது. குறிப்பாக புவிசார் அரசியலில் முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்தோ-பசிபிக் விவகாரத்தில் நாங்கள் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் மிகவும் சீரியஸாக இருக்கிறோம்.
அதே நேரம் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி செய்யும் நாடாக இருப்பதால் இந்த விஷயத்தின் முழு உண்மைகளைக் கண்டறிய இந்தியா கனடாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கும் போது ஹர்தீப் கொலை குறித்துக் கேட்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உறுதி அளித்துள்ளார்.

இந்திய ஏஜெண்டுகள்: "கனடா மண்ணில் கனடா குடிமகன் ஒருவரை இந்திய அரசின் ஏஜெண்டுகள் கொன்றதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருப்பது முக்கியமானது என்பதால் இந்த விவகாரம் குறித்துப் பேசுவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. நாங்கள் மட்டமில்லை அனைத்து ஜனநாயக நாடுகளும் இதுபோன்ற விவகாரத்தைத் தீவிரமாகவே எடுத்துக் கொள்ளும். நாங்கள் மிகவும் பொறுப்பான முறையில் இந்த விவகாரத்தைக் கையாண்டு வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா கனடா உறவு: இந்த விவகாரம் தொடங்கியது முதலே இரு நாடுகளும் மாற்றி மாற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முதலில் இரு நாடுகளும் தூதர்களை வெளியேற்றினர். பின் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்தியா மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டவருக்குக் குடியுரிமையும் வழங்கப்படாது என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications