102 வயது வரை வாழும் கனடா பாட்டிகள்? வியந்துபோன கோபிநாத்! இது எப்படி சாத்தியம்?
கனடா: 'நீயா நானா' கோபிநாத் ஓட்டாவா உணவகத்திலிருந்து எடுத்துப் போட்ட வீடியோ ஒன்று இளைஞர்கள் பலரையும் ஈர்த்துள்ளது. வயதான பலருக்கு இன்னும் சிறப்பாக வாழ வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளது.
கனடா நாட்டின் தலைநகரம் ஓட்டாவாவுக்கு சென்றிருக்கிறார் 'நீயா நானா' கோபிநாத். அங்குள்ள ஒரு தாய் உணவகத்திற்கு அவர் யதேச்சையாகச் சென்றபோதுதான் அவர் வாழ்நாளில் மிகச் சிறப்பான அனுபவத்தைப் பெறப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவில்லை. உணவகத்தின் உள்ளே சென்ற அவருக்குச் சரியான சர்ப்ரைஸ் காத்திருந்தது. அது என்ன? அப்படி கோபி யாரைப் பார்த்தார்? அது பற்றி அவரது யூடியூப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் கோபி.

"நான் ஓட்டவா நகரத்தில் உள்ள தாய் உணவகத்திற்கு வந்திருக்கிறேன். யதேச்சையாகத்தான் உணவகத்தின் உள்ளே போய்விட்டேன். அங்கே நுழைந்த பிற்பாடு ஒரு உற்சாகமான காட்சியைப் பார்த்தேன். உணவகத்தில் 90 வயதைக் கடந்த நிறைய பெருசுகள் உட்கார்ந்து மகிழ்ச்சியாகப் பேசி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த வயதில் இவர்கள் எப்படி உற்சாகமாக, இளைமையாக இருக்கிறார் என்பதைப் பார்த்தபோது அதை வீடியோவாக எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அங்கே மொத்த 16 பாட்டிகள் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நம்ம ஊரில் வேலையில் ஓய்வு பெற்றுவிட்டாலே வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்துவிடுகிறார்கள். வெளிநாடுகளில் உள்ளவர் அப்படி அல்ல" என்கிறார் கோபிநாத்.
அந்த உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டிகளில் ஒருவரைச் சந்தித்த அவரது வயதை விசாரித்த கோபி, ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோனார். 'எங்க வயசு என்ன?' என்று அவர் கேட்க, அதற்குப் பாட்டி 95 என்கிறார். அட, கடவுளே. உங்களைச் சந்தித்ததில் எனக்கு பெரிய மகிழ்ச்சி' என்றவர் அருகில் உள்ள பாட்டியைக் கேட்டபோது அவர், 'என் வயதைச் சொல்ல மாட்டேன். அது ரகசியம்' என மறுத்துவிட்டார். அதில் உள்ள மற்றொரு பாட்டி பேசும் போது, "நாங்கள் மாதம் ஒருமுறை சந்திப்போம். இதில் 23 வருடங்களாகச் சந்திப்பவர்களும் உள்ளனர். நாங்கள் எல்லோரும் இணைந்து நிதி திரட்டுகிறோம். அதை ஏழை எளிய மக்கள் படிப்பதற்காகச் செலவிடுகிறோம். வருடத்திற்கு 6 ஆயிரம் டாலர் நிதி திரட்டி உதவுகிறோம்" என்றவர் கோபியைப் பார்த்து நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றார். அவர் தென் இந்தியாவில் உள்ள சென்னை என்றார். அதற்குப் பாட்டி, எனது உறவினர்கள் கேரளா வந்துள்ளனர் என்றார்.
இன்னொரு பாட்டி, "நான் உயர்நிலையில் பள்ளியில் பிரின்ஸ்பல் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவள். அதன்பிறகு வேறு ஒரு பள்ளியில் 3 ஆண்டுகள் முதல்வராக இருந்தேன். இது கனடியன் பெண்கள் பல்கலைக் கழக கிளப். இது ஒரு புக் கிளப் கூட. ஒவ்வொரு மாதமும் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு உணவகத்தில் சந்திப்போம்" என்கிறார்.
கோபிக்கு அடுத்ததாகச் சந்தித்த பாட்டிதான் பயங்கரமான அதிர்ச்சி தந்தார். அவரைப் பார்த்தால் நம் ஊர் 60 வயது பாட்டி போலத் தோற்றத்தில் தெரிகிறார். அவரது வயதை விசாரித்தால் 102 என்று சாதாரணமாகச் சொல்கிறார். இந்த வயதில் அவர் புத்தகம் படிக்கும் கிளப்பில் தீவிரமாக இயங்குகிறார். கூடவே சமூக சேவை செய்கிறார். மாதம் ஒருமுறை காரில் தனியாக வந்து தோழிகளை உணவகத்தில் ஜாலியாக சந்தித்து பொழுதைக் கழிக்கிறார். நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது. இந்தப் பாட்டியின் பக்கத்திலேயே 100 வயது பாட்டி ஒருவர் தன்னை கோபியிடம் அறிமுகம் செய்துகொள்கிறார்.

மற்றொரு பாட்டி பேசும்போது, "எனக்கு வயதானாலும் நான் தனியேதான் வசிக்கிறேன். என் உணவுகளை நானே சமைத்துக் கொள்கிறேன். என் வீடு நயகரா நீர்வீழ்ச்சி பக்கத்தில் உள்ளது. இந்த வயதிலும் நான் கம்ப்யூட்டர் பற்றி படித்து கற்றுக் கொண்டு இருக்கிறேன். 2016 ஓட்டவாவுக்கு வந்தேன். என் இரண்டு பிள்ளைகள் இங்கே வசித்ததால் வந்தேன். அவர்களே இப்போது ஓய்வு பெற்றுவிட்டனர். என் மகன் மைக்ரோசாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தவர். என் மகள் நகராட்சி பள்ளியில் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். நானும் ஆரம்ப பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றேன். எனக்கு 1960 கல்யாணமானது. எனக்கு வாழ்க்கை அலுக்கவே இல்லை. தினமும் புத்தகம் படிப்பேன். செய்தித்தாள் படிப்பேன். சமைப்பேன். அதற்கே நேரம் சரியாக உள்ளது" என்கிறார்.
இந்த ஒட்டுமொத்த பாட்டிகளும் இளமையாக இருக்கச் சொல்லும் ஒரே டிப்ஸ் உற்சாகமாக இருங்கள். நண்பர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிடுங்கள். தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நல்ல உணவை சாப்பிடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். நல்ல புத்தங்களைப் படியுங்கள். வயதும் உடலும் மனமும் இளைமையாக இருக்கும் என்கிறார்கள். இதைத்தான் Philosophy Of Ikigai என்ற ஜப்பானியப் புத்தகம் சொல்கிறது என்கிறார் கோபி. அதைக் கனடாவில் உள்ள பாட்டிகள் நிஜமாகவே அனுபவித்துக் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த வீடியோவில் கருத்துச் சொல்லி இருக்கும் பலரும் தன் வாழ்நாளில் பார்த்த சிறப்பானது இதுதான் என்று சொல்லி இருக்கிறார்கள். பலரும் இகிகய் புத்தகத்தைப் படித்து தங்களை இளமையாக மாற்றப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications